2வது ஓட்டெடுப்பில் வெற்றி: ஜெர்மனியின் புதிய அதிபரானார் பிரெட்ரிக் மெர்ஸ்

பெர்லின்: ஜெர்மனி நாட்டு பார்லிமெண்டில் இன்று நடந்த வாக்கெடுப்பில், பிரெட்ரிக் மெர்ஸ் பெரும்பான்மையை நிரூபித்தார்.
ஐரோப்பாவின் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியில் பிப்ரவரியில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் பார்லிமென்டில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
அதன்படி பார்லியில் வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.
ரகசிய வாக்கெடுப்பில் 630 வாக்குகளில் அவருக்கு 316 என்ற எண்ணிக்கையில் அவருக்கு பெரும்பான்மை தேவைப்பட்டது. முதல் சுற்றில் அவரால் 310 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
அதனை தொடர்ந்து பிற்பகல் நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில் மெர்ஸ் 325 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அவரது அதிபர் பதவி உறுதி செய்யப்பட்டது.
யார் இந்த பிரெட்ரிக் மெர்ஸ்:
2002ல் ஏஞ்சலா மெர்க்கலிடம் கட்சி அதிகாரப் போராட்டத்தில் தோற்ற பின்னர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியார் துறையில் பணியாற்றினார் மெர்ஸ். வசதிபடைத்த, கத்தோலிக்க மேற்கு ஜெர்மன் வழக்கறிஞரான அவர், பொழுதுபோக்கு விமானியும் ஆவார்.
ஜெர்மனியின் அதிபராக பதவியேற்ற பிரெட்ரிக் மெர்ஸ்க்கு, உக்ரைன் மற்றும் பிரான்ஸ் அதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தனது வாழ்த்து செய்தியில், ஐரோப்பாவின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதால் இது மிகவும் முக்கியமானது, மேலும் இது நமது ஒற்றுமையைப் பலப்படுத்தும் என்று கூறியுள்ளார்.