பெண் குழந்தையுடன் உரையாடுங்கள் பெற்றோருக்கு போலீஸ் 'அட்வைஸ்'

செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் பகுதிகளில், போக்சோ மற்றும் சைபர் கிரைம் வழக்குகள் பதிவாவதை தடுக்க, வாரிய குடியிருப்பு பெண்களிடம் மகளிர் போலீசார் விழிப்புணர்வு நடத்தினர்.
செம்மஞ்சேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி பேசியதாவது:
பெற்றோர் வேலைக்கு சென்றாலும், குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். படிப்பு தான் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும்.
எந்த சூழலிலும் படிப்பை இடையில் நிறுத்தி விடாதீர். படிப்புக்கு உதவ, பல நல்லுள்ளங்கள் உள்ளன.
குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். பல பெண் குழந்தைகள், இன்ஸ்டாகிராமில் நேரத்தை செலவிட்டு, வாழ்க்கையை பாழாக்கும் சூழல் உள்ளது.
அவர்களுக்கு, 18 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்துவதுடன், அவர்கள் உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
கோடை விடுமுறையில், வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகள், மொபைல் போன் வழியாகவும், சிலரின் தவறான வழிகாட்டுதல் வாயிலாகவும் திசை மாற வாய்ப்பு உள்ளது.
பெற்றோர் வேலையில் இருந்து வீடு திரும்பும்போது, குழந்தைகளுடன் சில நிமிடங்கள் உரையாடுங்கள்.
அப்போது தான், அவர்களுக்கு, நம்மை கவனிக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படும். யாராவது சீண்டினால், உடனே பெற்றோரிடம் கூற வேண்டும் என்ற புரிதலும் எற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு கூடுதல் டி.எஸ்.பி., அனந்தராமன், குழந்தை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவல் உதவி செயலி குறித்து பேசினார்.
சைபர் கிரைம் தடுப்பு கூடுதல் டி.எஸ்.பி., பிரபாகர், லோன் செயலியை பதிவிறக்கம் செய்து ஏமாந்தவர்கள் குறித்தும், மொபைல் போன் உபயோகப்படுத்துவது குறித்தும் பேசினார்.