உப்பிலிபாளையம் பழைய மேம்பாலத்தை விஸ்தரிப்பு செய்ய இயக்குனர் கள ஆய்வு
கோவை : கோவை - அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பழைய மேம்பாலத்தை விஸ்தரிப்பு செய்வது தொடர்பாக, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன், ஆய்வு செய்தார்.
கோவை - அவிநாசி ரோடு, மில் ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு, ப்ரூக் பீல்ட்ஸ் ரோடு சந்திக்கும் பகுதியில், உப்பிலிபாளையம் பழைய மேம்பாலம் (ரோட்டரி) அமைந்திருக்கிறது.
கடந்த ஜன., 3ல் இப்பாலத்தில் காஸ் டேங்கர் லாரி திரும்பியபோது, கவிழ்ந்தது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி, பாதுகாப்பாக அகற்றப்பட்டது. அவ்விடத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பாலத்தை அகலப்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது.
கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டப்படும் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, உப்பிலிபாளையம் சந்திப்பை இன்னும் ஏராளமான வாகனங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கும்.
எதிர்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக, அவிநாசி ரோட்டில் இருந்து ப்ரூக் பாண்ட் ரோட்டுக்குச் செல்லும் வகையில் பாலத்தை விஸ்தரிப்பது தொடர்பாக, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்கு தேவையான நிதி ஒதுக்கி, பணியின் அவசர அவசியத்தை புரிந்து செயல்படுத்தக் கோரி, நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ்க்கு, மாவட்ட நிர்வாகத்தில் இருந்து கடிதம் எழுதப்பட்டது.
மேம்பாலத்தை விஸ்தரிக்க வேண்டிய, அவசியத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சரவணனுக்கு, செயலர் உத்தரவிட்டார்.
அதன்படி அவர், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவையில் நடந்து வரும் அனைத்து விதமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், 'மேம்பாலத்தின் நான்குபுறமும் விஸ்தரிக்க, ரூ.20 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளோம். இரு மாதத்துக்குள் அனுமதி பெற்று விடுவோம்' என பதிலளித்திருக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி பெற்று, நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் கோரி செயல்படுத்துவதென்றால், தேவையற்ற தாமதம் ஏற்படக் கூடும் என்பதால், தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அவிநாசி ரோடு - ப்ரூக் பாண்ட் ரோட்டை இணைக்கும் வகையில், விஸ்தரிப்பு பணியை விரைந்து செய்ய, வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பணியையும் இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். ஒப்பந்தப்படி, 2026 ஆக., மாதத்துக்குள் பணியை முடிக்க வேண்டும். தற்போது வரை நடந்துள்ள பணிகளை பார்வையிட்டு, அதன் தரத்தை சோதித்துப் பார்த்த இயக்குனர், வேலையை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் அசத்தல்
-
‛ஆப்ரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்