எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பழைய குடை போய் புது குடை வந்தது

கோவை : கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., (பா.ஜ.,) வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியில், டவுன்ஹாலில் பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மணிக்கூண்டு மாடலில் வடிவமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஆறு பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் அறிய, 'டிஜிட்டல் ஸ்கிரீன்' அமைக்கப்பட்டிருக்கிறது; பஸ்கள் செல்லும் வழியை 'கூகுள் மேப்' உதவியுடன் அறியலாம். இரு இடங்களில், 'சிசி டிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக, தொகுதி மேம்பாட்டு நிதியில், 16 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது. பயணிகளை இந்த நிழற்குடை ஈர்க்கிறது.

அந்த நிழற் குடை எங்கே?



இதே இடத்தில், 2016-21 வரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த அம்மன் அர்ஜூனன் தொகுதி மேம்பாட்டு நிதியில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது.

கமிஷனராக பிரதாப் பணியாற்றிய சமயத்தில், தற்காலிகமாக அகற்றப்பட்டது. எம்.எல்.ஏ., ஆட்சேபனை தெரிவித்ததும், அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதற்கிடையே, கமிஷனர் இட மாறுதலாகிச் சென்று விட்டார்.

தற்போது, அவ்விடத்தில், தற்போதைய எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் ஒதுக்கிய நிதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல லட்சம் ரூபாய் செலவழித்து அமைக்கப்பட்டு, அகற்றப்பட்ட நிழற்குடை எங்கே என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனனிடம் கேட்டதற்கு, ''தொகுதிக்குள் வேறொரு இடத்தில் நிழற்குடை அமைப்பதாக கமிஷனர் கூறியுள்ளார்,'' என்றார்.

காலியிடத்தில் மீண்டும் அமைக்க கமிஷனர் உறுதி



மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் பெயரில் இருந்த நிழற்குடையை மீண்டும் அமைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் தவறு செய்து விட்டனர்.

தற்போது அமைத்துள்ள நிழற்குடைக்கு அருகில் காலியிடம் இருக்கிறது; அவ்விடத்தில், ஏற்கனவே அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் பெயரில் அமைக்கப்படும்,'' என்றார்.

Advertisement