உளவுத்துறை ரிப்போர்ட் எதிரொலி என்.எல்.சி., தொ.மு.ச.,வில் உட்கட்சி தேர்தல்

என்.எல்.சி.,யில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு நடந்து முடிந்த ரகசிய ஓட்டெடுப்பில், தொ.மு.ச., நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள் காரணமாக, தொ.மு.ச., உறுப்பினர்களின் ஓட்டு மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் தொ.மு.ச., பறி கொடுத்தது.

இதனால், தொ.மு.ச.,வின் சிங்கிள் மெஜாரிட்டி கனவு பலிக்கவில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, உளவுத்துறையினர் அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் என்.எல்.சி., - தொ.மு.ச.,வுக்கு உடனடியாக உட்கட்சி தேர்தலை நடத்திடுமாறு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தொ.மு.ச., பேரவை தலைவர் சண்முகம் எம்.பி., இன்னும் ஓரிரு தினங்களில் நெய்வேலி வருகை தர உள்ளார். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள என்.எல்.சி., தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்க உள்ள செயற்குழுக்கூட்டத்தில் தொ.மு.ச., உட்கட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வரும் 31 ம் தேதிக்குள் தேர்தல் நடக்கும் என கூறப்படுகிறது. இதனால் தொ.மு.ச.,வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மட்டுமின்றி அலுவலக பகுதிகளிலும் தொ.மு.ச., தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் தேர்தல் பணிகளை துவக்கி விட்டனர்.

நகரின் பல பகுதிகளிலும் வேட்பாளர்கள் ஆதரவு கேட்டு டிஜிட்டல் போர்டு வைத்து கலக்கி வருகின்றனர். இதனால் நெய்வேலியில் மீண்டும் தேர்தல் திருவிழா கொண்டாட்டம் களை கட்டுவதால் தொழிற்சங்கத்தினர் மட்டுமின்றி கட்சியினரும் குஷியாகியுள்ளனர்.

Advertisement