பாக்., தந்தைக்கு பிறந்த 3 குழந்தைகள் வழக்கு; மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு : மைசூரு தாய்க்கும், பாகிஸ்தான் தந்தைக்கும் பிறந்த மூன்று குழந்தைகள் தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைசூரு மாவட்டம், ராஜிவ் நகரை சேர்ந்தவர் ரம்சா. இவருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த முகமது பரூக்கிற்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். மே 12ம் தேதி தங்கையின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, ஜனவரி மாதம் தன் மூன்று குழந்தைகளுடன் ரம்சா, மைசூரு வந்தார்.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தன் மூன்று குழந்தைகள் சார்பில் ரம்சா தாக்கல் செய்துள்ள மனு:

இந்திய தாய்க்கும், பாகிஸ்தான் தந்தைக்கும் நாங்கள் மூவரும் பிறந்துள்ளோம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பிரஜைகளை, ஏப்., 30ம் தேதிக்குள் அவர்களின் நாடுகளுக்கு செல்ல மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

நாங்கள் 28ம் தேதி வாகா எல்லைக்கு சென்றோம். எங்களை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. எங்களை பாகிஸ்தானுக்குள் செல்ல அந்நாட்டு அதிகாரிகள் மறுத்தனர்.

அத்துடன், எல்லையையும் மூடினர். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.

எனவே மீண்டும் மைசூரு வந்து விட்டோம். எங்களின் விசா காலம் ஜனவரி 4ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை உள்ளது.

எங்களுக்கு நீண்ட கால விசா அல்லது தற்போதுள்ள விசா காலத்தை நீட்டித்து வழங்கும்படி மைசூரில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் முறையிட்டு உள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிப்பிட்ட காலத்துக்குள், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நேரத்தில், மத்திய அரசு, எங்கள் மீது, மே 15ம் தேதி வரை எந்தவித தண்டனை நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இம்மனு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைகால அமர்வில் நீதிபதி உமா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதி, ''ஷரியத் சட்டத்தின்படி இந்திய தாயும், பாகிஸ்தான் பிரஜையும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

''ரம்சாவும், இதுவரை பாகிஸ்தான் பிரஜைக்கான உரிமை கோரவில்லை. இந்திய பிரஜையாகவே உள்ளார்.

''இவ்விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆட்சேபனைகள் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வழக்கு நாளை மீண்டும் விசாரிக்கப்படும்,'' என்றார்.

Advertisement