பட்டாளம்மன் கோவில் தேரோட்டம்300 ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன்
கெலமங்கலம்:கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. 300க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலத்தில் உள்ள பழமையான பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 5ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 8:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முன்னதாக, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின் தேரோட்டம் துவங்கியது. எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தேர் கமிட்டி தலைவர் சென்னபசப்பா, ஓசூர் கிரசர் ஓனர்ஸ் பெடரேஷன் துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
பஜார் தெரு, தேன்கனிக்கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில் சர்க்கிள், வாணியர் கோவில் தெரு வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி கெலமங்கலம் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. கெலமங்கலம், ஜீபி, தொட்டேகானப்பள்ளி, குட்டூர், எச்.செட்டிப்பள்ளி, தம்மண்டரப்பள்ளி, கோபசந்திரம், போடிச்சிப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், கோவில் முன்பும், தங்கள் வீடுகள் அருகிலும், 300 க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.