வேப்பமரங்களில் நோய் 200 மரங்களில் பாதிப்பு

திருவாடானை: திருவாடானை பகுதியில் உள்ள வேப்ப மரங்களில் நோய் தாக்குதலால் 200க்கும் மேற்பட்ட மரங்கள் கருகியது.

திருவாடானை தாலுகாவில் வீடுகளுக்கு முன்பாகவும், ரோட்டோரங்களிலும் ஏராளமான வேப்ப மரங்கள் வளர்ந்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட வேப்ப மரம் மனிதர்களுக்கு நிழல் மற்றும் குளிர்ச்சியை தரக் கூடியது. நாட்டு மருந்து, இயற்கை மருத்துவத்தில் வேப்பமரத்தால் அதிக பலன்கள் உள்ளன.

இவ்வளவு நன்மை தரக்கூடிய இந்த மரங்களில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களில் நோய் தாக்கியதால் இலைகள் கருகி உதிர்ந்து வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது மரங்களுக்கும் நோய் தாக்கும். பல ஆண்டுகளாக வேப்ப மரத்தை தேயிலை கொசுக்கள் தாக்கி வருகின்றன. தற்போது கோடை வெப்பத்தால் இலைகள் கருகி உதிர்கின்றன. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. விரைவில் இலைகள் பசுமையாக மாறும் என்றனர்.

Advertisement