மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் மத்திய அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

சேலம்:தேசிய இயற்கை வேளாண் மாநாடு வழிகாட்டல் குழு மேற்கு மண்டல கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற, தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது:


உலக அளவில் இயற்கை விவசாயிகள் மற்றும் ஆளுமைகள் பங்கேற்கும் மாநாடு, கோவை கொடிசியாவில், செப்., 12, 13, 14ல் நடக்க உள்ளது. அதற்கான மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம், சேலத்தில் நடந்தது. மரபணு மாற்ற தொழில்நுட்பத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் பெயரில், இரு விதைகளை அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட விதைகள், உயிர் கொல்லி நோய்களை உருவாக்கும். மண் மலட்டு தன்மை அடையும். பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயம் அழிந்து போகும். ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பத்துக்கு நிரந்தர தடை விதித்தும், அதற்கான கொள்கை முடிவெடுத்தும் தமிழகம் நடைமுறைப்படுத்தி உள்ளது. அதனால் வல்லுனர் குழு அமைத்து, உரிய ஆய்வு நடத்தி விதைநெல் குறித்த உண்மைத்தன்மையை, தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர்கள் ராமசாமி, முருகபூபதி, வாழை கருப்பையா அஜித்தன், விஞ்ஞானி முத்தமிழ்செல்வன் பங்கேற்றனர்.

Advertisement