பெருமை தரும் ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி

2

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


@1brபஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் என்ற நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை இந்திய ராணுவம் பூர்த்தி செய்துள்ளது. ஒரு புறம் போர்க்கால ஒத்திகை என்று பாகிஸ்தானை திசை திருப்பி ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது.


ஆபரேஷன் சிந்தூருக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ராணுவ வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு பஹல்காம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நன்றியையும், பெருமையையும் வெளியிட்டு உள்ளனர்.




தாக்குதலில் பலியான மனோஜ் திவேதியின் உறவினர் சுப்ஹம் திவேதி கூறுகையில்; ஏப்.22ம் தேதி தாக்குதலில் எங்கள் மகன் பலியான போது, நமது நாட்டில் ஒரு புரட்சி வரப்போகிறது என்று கூறினோம். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்பினோம். இன்று ராணுவம் அளித்த உண்மையான அஞ்சலிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன் மேனன் என்பவரின் மகள் ஆர்த்தி கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தாக்குதல், துக்கத்தில் இருக்கும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. பிரதமர் மோடிக்கு நன்றி. எங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றார்.



சையத் அடில் ஹூசைன் ஷா சகோதரர் நௌஷாத் கூறுகையில், இது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் நாட்டின் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். ராணுவத்தின் தாக்குதலால் பெருமை கொள்கிறோம் என்றார்.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றும்போது கொல்லப்பட்ட குதிரை ஓட்டியான சையத் அடில் ஹுசைன் ஷாவின் தந்தை சையத் ஹைதர் ஷா கூறியதாவது:

காஷ்மீரில் பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அரசாங்கம் அவர்களை ஒழிக்க வேண்டும். பஹல்காமில் எனது மகன் அடிலின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது, அதற்காக அரசாங்கம் பழிவாங்க வேண்டும். அரசாங்கம் செய்வது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும், நம் அனைவருக்கும், அது ஒரு நல்ல விஷயம் என்றார்.


பஹல்காம் தாக்குதலில் பலியான சந்தோஷ் ஜக்டாலே மகள் அசாவாரி ஜக்டாலே கூறுகையில், சிந்தூர் ஆபரேஷன் செய்தியை கேள்விப்பட்டவுடன் நான் மிகவும் கதறி அழுதேன். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு கிடைத்த உண்மையான நீதி, அஞ்சலி என்றார்.

Advertisement