'போதை' வாலிபர்கள் அட்டகாசம் அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

திருத்தணி:திருத்தணி நகராட்சி, ஒன்பதாவது வார்டு பாலாஜி நகரில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே சில வாலிபர்கள், காலை முதல் இரவு 10:00 மணி வரை தொடர்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும், போதையில் இளைஞர்கள் அட்டகாசம் செய்வதும், அடிக்கடி வாலிபர்களுக்குள் தகராறு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இதனால், பெண்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். சில நேரங்களில் போதையில் பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும், அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, பாலாஜி நகர் வாசிகள் காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என, அப்பகுதி வாசிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட எஸ்.பி., இனியாவது நடவடிக்கை எடுத்து, பாலாஜி நகரில் நடக்கும் போதை வாலிபர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement