இரு சமூகத்தினர் மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் இரு சமூகத்தினர் மோதலில், ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் அரசு பஸ், போலீஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. இரு தரப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடில், விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக, இரு சமூகத்தினர் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பை சேர்ந்த ஒருவரை அரிவாளால் வெட்டினர்.

இதனால் இருதரப்பு மோதல் கலவரமாக மாறியது. ஒரு குடிசை வீடு, இரண்டு டூ - விலர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

தொடர்ந்து, இரண்டு கார்கள், ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள், கல், கட்டைகளை கொண்டு நொறுக்கப்பட்டது. அரசு பஸ், போலீஸ் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கலவரத்தில் முத்துகிருஷ்ணன் என்ற ஒரு போலீசார் உட்பட இருதரப்பிலும், 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மாவட்ட எஸ்பி., அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் வடகாட்டில் குவிக்கப்பட்டு, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மோதல் தொடர்பாக, ஒரு சமூகத்தைச் சேர்ந்த 13 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு தரப்பை சேர்ந்த ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement