காரைக்குடி அருகே அரசு பஸ், கன்டெய்னர் லாரி மோதி விபத்து: 3 பேர் பலி, 13 பேர் காயம்

காரைக்குடி:காரைக்குடி அருகே நள்ளிரவில் பால் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தடம் மாறி அரசு பஸ்சில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். 13 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் தேனாற்று பாலம் உள்ளது. அபாயகரமான வளைவு மற்றும் குறுகிய பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு திருச்சியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ் தேனாற்று பாலம் அருகே சென்றது. தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு பால் பாக்கெட் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி வந்தது. குறுகிய பாலத்தின் அருகில் இருந்த அபாயகரமான வளைவில் திரும்பும் போது லாரி தடம் மாறி எதிரே வந்த பஸ் மீது மோதியது.இதில் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. முன்பகுதியில் இருந்த லோடுமேன்கள் திண்டுக்கல் தாடிக்கொம்பைச் சேர்ந்த ஆறுமுகம் 57, கூவத்துார் கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் 31, முன்னிலை கோட்டை தமிழ் பாண்டி 27, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த லாரி டிரைவர் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த ரூபன் 22, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அரசு பஸ் டிரைவர் நாகராஜ், கண்டக்டர் செல்வேந்திர பிரசாத், 10 பயணிகள் காயமடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கண்டக்டர் செல்வேந்திர பிரசாத் புகாரின் பேரில், லாரி டிரைவர் ரூபன் மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆறுமுகத்தின் மூத்த மகளுக்கு மே 19 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஆறுமுகம் விபத்தில் சிக்கி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement