நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட்: இளம்பெண் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையை சேர்ந்த ஜித்து என்ற மாணவனின் ஹால் டிக்கெட் போலி என கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் பத்தனம்திட்டா போலீசில் புகார் செய்தனர்.

ஜித்து, அவரது தாய் ரமணியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு இ சென்டரில் ஹால் டிக்கெட் வாங்கியது தெரியவந்தது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் 1850 ரூபாயை இ-மையத்தில் ஜித்து கொடுத்துள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர் கிரிஷ்மா விண்ணப்பிக்க மறந்து விட்டார். ஹால் டிக்கெட் வாங்க மாணவன் வந்தபோது தான் விண்ணப்பிக்க மறந்ததது கிரிஷ்மாவுக்கு தெரிந்துள்ளது. தனது தவறை மறைப்பதற்காக மற்றொரு மாணவனின் ஹால் டிக்கெட்டை எடிட் செய்து ஜித்துவுக்கு வழங்கி உள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து பத்தனம்திட்டா மாவட்டம் தொலைவில் உள்ளதால் இவர்கள் தேர்வு எழுத சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் போலி ஹால் டிக்கெட் தயாரித்துக் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் தேர்வெழுத சென்றதையடுத்து கிரிஷ்மா சிக்கினார்.

பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் கிரிஷ்மா ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜித்து, ரமணியை போலீசார் விடுவித்தனர்.

Advertisement