மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்கு புதிய கட்டடங்கள்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தில் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவில். இங்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, மூலவர் அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டு வருகின்றனர். திறந்தவெளியில் பொங்கல் வைப்பதால் மழை, வெயில் நேரங்களில் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
அதேபோல், மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி ஆகிய நாட்களில், மூலவருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடப்பதால், பல ஆயிரம் பக்தர்கள் அம்மனை தரிசித்து செல்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, ஓய்வறை வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் பொங்கல் வைக்கும் மண்டபம் மற்றும் பக்தர்கள் ஓய்வறை, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கழிப்பறை மற்றும் அன்னதான கூடம் போன்ற புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு, முருகன் கோவில் நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது.
'ஒன்றரை மாதமாக கட்டட பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இரு மாதத்திற்குள் புதிய கட்டடங்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்' என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.