மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விவசாயிகள்... கவலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகளும், 593 ஏரிகளும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன. பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் பயிர் சாகுபடி செய்ய ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது பாசனகிணறுகள் ஆகும்.

மாவட்டத்தின் முக்கிய சாகுபடி பயிர்களான நெல், கரும்பு ஆகிய பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இன்றி பாய்ச்ச வேண்டும்.

கடந்த நவம்பர் மாதம் பெஞ்சல் புயலின் போது பெய்த கன மழை காரண மாக மாவட்டத்தில் போதிய அளவு நீர்வளம் அதிகரித்துள்ளது. அணை, ஏரி, தடுப்பணைகளிலும் ஓரளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பாசனக் கிணறுகளிலும் தண்ணீர் உள்ளது.

இதனால் கோடை காலம் தொடங்கும் முன், பயிர்களை பாதுகாக்க தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று விவசாயிகள் நிம்மதியுடன் இருந்தனர். இதற்கு எதிர்மாறாக கிணற்றில் உள்ள தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்ச முடியாமல் மும்முனை மின்சாரம் வழங்குவதில் மாவட்டம் முழுவதும் குறைபாடுஏற்பட்டுள்ளது.

சராசரியாக பாசனக் கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைப்பதற்கு நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் சில வாரங்களாக நாளொன்றுக்கு 2 மணி நேரம் கூட தொடர்ந்து மும்முனை மின்சாரம்வழங்கப்படுவதில்லை.வழக்கமாக கோடை காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகும்.

இத்தருணத்தில் நகர்ப் புறங்களிலும் குடியிருப்பு பகுதிகளும் ஓரளவு மின்தடை ஏற்படாமல் சமாளித்தாலும் வெளியில் தெரியாமல் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயிகள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் மும்முனை மின்சாரம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற காரணத்தால் இரவு பகல் பாராமல் வயல்களிலேயே படுத்துகிடக்கின்றனர்.

பல இடங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியை செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கரும்புக்கு போதிய அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மிகுந்தசிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பெய்த மழை காரணமாக ஓரளவு தண்ணீர் கிடைத்துள்ளது. கோடை மழை பெய்தாலும் போதிய அளவு கிடைக்காது என்பதுதான் நிதர்சனம்.மாவட்டத்தின் முக்கிய ஜீவாதாரமான விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் கோடைகாலத்தில் போதிய அளவு மும்முனை மின்சாரத்தை வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என்றனர்.

Advertisement