244 மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை தயார் நிலையில் அனைத்து துறைகள்

புதுடில்லி: போர் ஏற்பட்டால், அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக, நாடு முழுதும், 244 'சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில்' இன்று முழு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பல துறைகள், பொதுமக்கள் ஈடுபட உள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு போர் நடந்தால், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முழு பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன், 1971 ஏப்., 6ம் தேதி சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அந்த ஆண்டு, டிச., 3ம் தேதி, இந்தியா- - பாகிஸ்தான் இடையே போர் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடந்த போரின் இறுதியில், பாகிஸ்தான் சரணடைந்தது. இதைத் தொடர்ந்து, கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற புதிய நாடானது.
தற்போது, பாகிஸ்தானுடன் மீண்டும் போர் ஏற்படலாம் என்ற சூழல் நிலவும் நிலையில், தற்போதைய தலைமுறையினருக்கு, பாதுகாப்பு தொடர்பாக விளக்கும் வகையில், பாதுகாப்பு ஒத்திகைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, 244 சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இவை, வழக்கமான மாவட்டங்கள் அல்ல. அணு உலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், அணுமின் நிலையங்கள், நீர்த்தேக்கங்கள், மின்சார தொகுப்புகள், விமான நிலையங்கள் என, முக்கியத்துவம் வாய்ந்தவை அடங்கியதே, சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள்.
தமிழகத்தில் எங்கே?
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு - காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய எல்லையோர மாநிலங்களில் அதிக இடங்களில் இந்த ஒத்திகை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களில், இன்று மாலை ௪:௦௦ - ௪:௩௦ வரை ஒத்திகை நடக்கவுள்ளது.
எதிரி விமானங்கள் குண்டுகளை வீச வருவதை எச்சரிக்கும் வகையில், வான்வழி எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்படுவது; தாக்குதல் நடந்தால் எப்படி பாதுகாத்துக் கொள்வது; முக்கிய ஆலைகள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவற்றை மறைப்பது; மீட்புப் பணிகளை மேற்கொள்வது போன்றவற்றுக்கு தயாராகும் வகையில், இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.
இதில், ராணுவம், போலீஸ், தீயணைப்புத் துறை உட்பட பல துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.
மேலும், தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்களுக்கும் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்டுள்ளன.
இதைத்தவிர, விளக்குகள் உள்ளிட்டவற்றை அணைத்து முழுமையாக இருளாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாகவும் ஒத்திகை பார்க்கப்பட உள்ளது.
ஒருவேளை போர் ஏற்பட்டால், மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
டில்லி, ஜம்மு - காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்றே சில இடங்களில் இதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
சமூக வலைதளத்தில் பா.ஜ., வெளியிட்ட பதிவில், 'பாதுகாப்பு ஒத்திகையில், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள், மாணவர்கள் என, அனைத்துத் தரப்பினரும் தாமாக முன்வந்து பங்கேற்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் பாயாது
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ''முன்னதாக, நம் நாட்டுக்கு சொந்தமான தண்ணீர் நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தது; இனி நம் நாட்டின் தண்ணீர் உள்நாட்டுக்குள் மட்டுமே பாயும்; நாட்டிற்காகவும், அதன் நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படும்,'' என்றார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் மோடி தினமும் மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ராஜஸ்தானில், இன்று பெரிய அளவில் இந்திய விமானப் படையின் போர் பயிற்சி நடக்கவுள்ளது. இன்று இரவு, 9:30க்கு துவங்கும் இந்த பயிற்சி, நாளை அதிகாலையில் முடிவடையும் என தெரிகிறது. நாளை மறுநாளும் பயிற்சி நடக்க உள்ளது. 'ரபேல், மிக் 29, மிராஜ் 2000, தேஜஸ்' உள்ளிட்ட விமானங்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்காக, விமானப்படையின் தென்மேற்கு பிரிவுக்கு, 'நோட்டீஸ் டூ ஏர்மேன்' என்ற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
↓இந்திய விமானப்படையுடன் ஹாட்லைன் மற்றும் ரேடியோ தொடர்பு இணைப்புகளை செயல்படுத்துதல் ↓கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்திறனை மதிப்பிடுதல் ↓விபத்து தடுப்பு நடவடிக்கைகளை வழங்குதல் ↓அணுமின் நிலையங்கள், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ஆலைகள், சுத்தகரிப்பு ஆலைகள், முக்கிய ஆலைகள், நிறுவனங்களை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடு ↓தன்னார்வலர்கள், தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றின் செயல்பாட்டை உறுதி செய்தல் ↓அவசர காலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களின் தயார்நிலை மற்றும் அவற்றின் செயல்பாட்டை மதிப்பீடு செய்தல் ↓மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்துதல்.
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்