ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., கைது

கெம்பேகவுடா நகர் :வழக்கில் பெயரை சேர்க்காமல் இருப்பதற்கு, தொழிலதிபரிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, கெம்பே கவுடா நகரில் வசிப்பவர் உத்தம் சந்த்; தொழிலதிபர். இவருக்கும், ஆவலஹள்ளியை சேர்ந்த இன்னொரு தொழிலதிபரான கேசவமூர்த்திக்கும், 2020ல் அறிமுகம் ஏற்பட்டது.

கெம்பே கவுடா நகரில் பார் வைப்பதற்கு, உரிமம் வாங்கி தருவதாகக் கூறி, 2020 முதல் 2022 வரை, உத்தம் சந்த்திடம் இருந்து 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 1.30 கோடி ரூபாயை, கேசவமூர்த்தி வாங்கினார். ஆனால் பார் வைக்க உரிமம் வாங்கித் தரவில்லை.

உத்தம் கொடுத்த தங்க நகைகள், பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை. நகை, பணத்தை கேட்டபோது உத்தமுக்கு, கேசவமூர்த்தி கொலை மிரட்டலும் விடுத்தார்.

இதுபற்றி உத்தம் அளித்த புகாரில் கேசவமூர்த்தி மீது, கடந்த பிப்ரவரி 20ம் தேதி கெம்பே கவுடா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் கேசவமூர்த்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய இன்ஸ்பெக்டர் சிவாஜி ராவ், எஸ்.ஐ., சிவானந்த் ஆகியோர், 'வழக்கில் இருந்து உங்கள் பெயரை கைவிடுகிறோம்.

'ஆனால் லஞ்சமாக எங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என்று கேட்டுள்ளனர்.

இதற்கு கேசவமூர்த்தியும் ஒப்புக் கொண்டார். ஆனால் பணம் கொடுக்க கொஞ்சம் அவகாசம் தரும்படி கேட்டிருந்தார். இதற்கு இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ.,யும் ஒப்புக் கொண்டனர்.

அதன்பின் கேசவமூர்த்திக்கு அடிக்கடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'உடனே பணம் வேண்டும்' என, இருவரும் கேட்டுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கேசவமூர்த்தி, சிவாஜி ராவ், சிவானந்த் மீது, லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். அவருக்கு சில அறிவுரைகளை வழங்கி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, லோக் ஆயுக்தா போலீசார் கொடுத்து அனுப்பினர்.

நேற்று முன்தினம் இரவு கெம்பே கவுடா நகர் போலீஸ் நிலையம் அருகே, காலி நிலத்தில் வைத்து சிவாஜி ராவ், சிவானந்த்திற்கு 1 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை கேசவமூர்த்தி கொடுத்தார்.

அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யை கையும், களவுமாக கைது செய்தனர்.

Advertisement