உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

அனுப்பர்பாளையம் :திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, 5ம் தேதி முதல் முகூர்த்தகால் பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில், நேற்று காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உத்தமலிங்கேஸ்வரர் மற்றும் கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டுகொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சோமாஸ்கந்தர் திருவீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவில், இன்று முதல் 9ம் தேதி வரை தினமும் இரவு 8:00 மணிக்கு மண்டப கட்டளை, 10ம் தேதி இரவு உத்தமலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், 11ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் ஆகியன நடைபெறுகிறது.

வரும், 12ம் தேதி காலை திருத்தேர்களுக்கு உற்சவமூர்த்திகள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அன்று மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்படாடு, 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபரீஷ்குமார், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement