தாவணகெரே ரவுடி கொலை போலீசில் 10 பேர் சரண்

தாவணகெரே : தாவணகெரேவில் பிரபல ரவுடி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பத்து பேர் போலீசில் சரணடைந்தனர்.

சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்ற கனுமா. இவர், தாவணகெரேவில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு தாவணகெரே நகரில் உள்ள ஹடாடி சாலையில் உள்ள சோமேஸ்வரா மருத்துவமனைக்கு எதிரே உள்ள கிளப்பில் மது அருந்திவிட்டு, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த எட்டு பேர், அவரை சராமரியாக வெட்டினர். சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த கிளப்பில் இருந்தவர்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கொலைக் காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் பரவின.

சந்தோஷின் மனைவி ஸ்ருதி அளித்த புகாரின்படி, வித்யா நகர் போலீஸ் நிலையத்தில் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி., சரணபசவேஸ்வரா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சந்தோஷை கொலை செய்ததாக நேற்று மாலை கார்த்திக், 22, சாவலி சாந்து, 30, நவீன், 26, குண்டப்பா, 32, பசவராஜ், 22, ஹனுமந்தப்பா, 23, கிட்டா விஜி, 27, சிக்கமனஹள்ளி சிவு, 30, ரகு, 27, பிரசாந்த், 28, ஆகிய 10 பேர் ஹொலல்கெரே போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சரண் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தோஷின் நண்பர்கள். சந்தோஷ் கொடுத்த வாக்கை நிறைவேற்றாததால், கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய மீதமுள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement