மத்திய, மாநில அரசுகளின் வனத்துறைக்கு வழிகாட்டுதல்களை அறிவித்தது ஐகோர்ட்

பெங்களூரு : மின்சாரம் பாய்ந்து யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில வனத்துறையினருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வரும் யானைகள், சட்டவிரோதமாக வைக்கப்படுள்ள மின்சார வேலியில் சிக்கி, உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளின் அடிப்படையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது.

நேற்று அவர்கள் கூறியதாவது:

கர்நாடகாவில் 2023 - 24ம் ஆண்டுகளில் 13 யானைகளும், 2024 - 25ல் 12 யானைகளும் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, உதவி வனத்துறை அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யானைகள் உட்பட அனைத்து வகையான தாவரங்கள், வன விலங்குகள், மனிதர்களுடன் பிரிக்க முடியாத அளவில் இணைக்கப்பட்டு உள்ளன.

வனப்பகுதியில் மின்சார வேலியில் இருந்து யானைகளை காப்பாற்றுவது வனத்துறையினரின் பொறுப்பு. யானைகள் உட்பட வன விலங்குகள் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பதை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக, மத்திய, மாநில வனத்துறையினர், உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்ற வேண்டும்:

 யானைகள் அதிகம் உள்ள இடங்களில், அங்கீகரிக்கப்படாத மின் கம்பிகள், சட்ட விரோத மின் வேலிகள் காரணமாக, விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதியை அடையாளம் காணுதல்

 பல்வேறு வன மண்டலங்களுக்கு பகுதி வாரியாக விசாரணை குழுவை, தலைமை வன பாதுகாவலர்கள் அமைக்க வேண்டும். இக்குழுவினர் அவ்வப்போது ஆபத்தான பகுதியை அடையாளம் காண வேண்டும்

 வனப்பகுதி வழியாக செல்லும் மின் கம்பிகளை அமைக்கும்போது, சுற்றுச்சூழல், வனம், கால நிலை மாற்றம் அமைச்சகம், 2016ல் வெளியிட்ட வழிகாட்டுதலை அமல்படுத்தி, அவற்றின் செயல்பாடுகளை கண்காணித்தல்

 யானைகளின் பாதுகாப்புக்காக, வனத்துறை அதிகாரிகள், மின் துறையுடன் ஒருங்கிணைந்து, வனப்பகுதியில் தாழ்வான பகுதிகளில், மின் கம்பிகள் போதுமான உயரத்துக்கு செல்கிறதா என்பதை ஆய்வு செய்தல்

 சட்டவிரோத மின் வேலிகள், மின் கம்பிகள், யானைகள் வழித்தடத்தில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளுதல்

 சம நிலையான, செங்குத்தான பகுதிகளில் தேசிய வனவிலங்கு கவுன்சிலின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுதல்

 விவசாய நிலங்களை பாதுகாக்க விவசாயிகள் அமைத்துள்ள சட்டவிரோத மின்வேலிகளை கண்டுபிடித்து அகற்றுதல்

 அறிவியல் பூர்வமாக விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்தல்

 வனப்பகுதியில் மொபைல் போன் டவர்கள், மின்சார ஒயர்களை அமைக்க விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுதல்

 சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பகுதிகளில், நிலத்தடியில் மின்சார ஒயர்களை கொண்டு செல்வதை ஊக்கப்படுத்துதல்

 வன விலங்குகளின் உயிர், அவர்களின் தேவை குறித்து கிராமப்புற மக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

 சாலையை யானைகள் கடக்கும்போது விபத்தில் சிக்காமல் இருக்க, சாலையை கடக்க, தேவையான இடங்களில் பாலம் கட்டலாம்

 நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் கண்காணிப்பு தொழில்நுட்பம் போன்று பயன்படுத்தலாம்

 யானைகள் உட்பட வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, அவற்றின் கழுத்தில் ரேடியோ காலர்களை பொருத்தலாம்

 வன விலங்கு தொடர்பான வழக்குகளில் புகார்களை பதிவு செய்து, விரைந்து நடவடிக்கை எடுத்தல்

 அதிகாரிகள், ஊழியர்களின் அலட்சியத்தால் யானைகள் இறந்தால், அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

யானைகள் உட்பட வன விலங்குகளை பாதுகாக்க, உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement