பத்தல... பத்தல! கோவை - சென்னை வந்தேபாரத்தில் பெட்டி; கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை

கோவை: கோவை - சென்னை இடையே இயக்கப்படும், வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை வலுத்துள்ளது.

கோவையில் இருந்து சென்னைக்கு, 2023, ஏப்., மாதம் வந்தேபாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. 20643/20644 என்ற எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது.

புதனன்று பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்படும். இரு மார்க்கங்களிலும் சேலம், ஈரோடு, திருப்பூர் என மூன்று ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது இந்த ரயில்.

காலை 6:00 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மதியம், 2:15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8:15 மணிக்கு கோவை வந்தடைகிறது.

ரயிலின் சராசரி வேகம் மணிக்கு, 80 கி.மீ., அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு, 130 கி.மீ., ஆக உள்ளது. இதன் காரணமாக, 5 மணி நேரம் 50 நிமிடத்தில், 495 கி.மீ., தூரத்தை கடக்கிறது.

குறைந்த நேரத்தில் பயணிக்க முடிகிறது என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னைக்கு பயணிக்கும் பயணிகள் மத்தியில், இந்த ரயிலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனால், துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஆனால், தேவை அதை விட அதிகமாக உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு பெட்டிகளின் எண்ணிக்கையை, 16 ஆக உயர்த்த வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது.

கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டால், ரயில்வே துறைக்கு வருவாய் அதிகம் கிடைக்கும். பயணிகளும் பயன் பெறுவர்.

Advertisement