இரட்டைக்கொலை எதிரொலி தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு 'கூகுள் பார்ம்' வாயிலாக விவரம் சேகரிப்பு
திருப்பூர் : ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் மூத்த தம்பதியான ராக்கியப்பன், 75, பாக்கியம், 60 வசித்து வந்தனர். கடந்த வாரம் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அடித்து கொலை செய்து, 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள தோட்டத்து வீடுகளில் கொலைகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்த கொடூர கொலை எதிரொலியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள தோட்டத்து வீடுகள், அதில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அறியும் வகையில், காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட சப்-டிவிஷன்களில் பிரத்யோகமாக, 200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
ஸ்டேஷனுக்குதலா இரு போலீசார்
இந்நிலையில், திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், வடக்கு, தெற்கு, நல்லுார், வீரபாண்டி, சென்ட்ரல் மற்றும் மங்கலம் என, ஒன்பது ஸ்டேஷன்கள் பகுதியில் நகரில் தனியாக உள்ள தோட்டத்து வீடு, தனியாக வசிக்கும் முதிய தம்பதி வீடு உள்ளிட்டவை நேற்று முதல் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளன.
இதற்காக, போலீசார் நியமிக்கப்பட்டு, கணக்கெடுப்பு பணியை செய்து வருகின்றனர். கள ஆய்வில் மக்களிடம் விபரம் சேகரிப்பதோடு, சந்தேக நபர்கள் நடமாட்டம் போன்றவற்றுக்கு உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சுழற்சி முறையில்கண்காணிப்பு
இது குறித்து, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:
திருப்பூரில் உள்ள தோட்டத்து வீடு, தனியாக உள்ள வீடு, முதிய தம்பதியர் வசிக்கும் வீடுகள் உள்ளிட்டவை குறித்து ஸ்டேஷன் வாரியாக கணக்கெடுக்கப்படுகிறது. இந்த விவரங்களை கள ஆய்வு செய்து போலீசார், 'கூகுள் பார்ம்' மூலமாக சேகரித்து வருகின்றனர். இதுபோன்ற பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து மேற்கொள்வர். இவ்வாறு, அவர் கூறினார்.