44 பேரின் இலவச பட்டா ரத்து வருவாய் துறையினர் அதிரடி

திருப்பூர்: அரசு கொடுத்த நிலத்தில் வசிக்காத, 44 பேரின் இலவச பட்டா ரத்து செய்யப்படுவதற்கான முயற்சி களில், வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் வடக்கு தாலுகா, பெருந்தொழுவு கிராமம் க.ச.எண். 190/3ஏ1 மற்றும் 190/3பில், 3.72 எக்டர் நிலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நிலம் எடுப்பு செய்யப்பட்டு, 188 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

பட்டா பெற்ற பயனாளிகளை, தமிழ் நிலம் மென்பொருளில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2021, ஜன., 13ல், வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளில், 44 பேர், பட்டா இடத்தில் வசிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

நிபந்தனையை மீறியுள்ளதால், மாவட்ட நிர்வாகம், அவர்களுக்கான பட்டாவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க உள்ளது. அந்நபர்கள் பட்டாவை ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை, 15 நாட்களுக்குள் நேரிலோ, கடிதம் வாயிலாகவோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பிவைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement