பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!

புதுடில்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.


கடந்த ஏப்.,22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் 26 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக இன்று ஆபரேஷன் சந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.


இதனால், இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.


ஏற்கனவே, சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோ மற்றும் நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டனர்.


இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது. 96549-58816 மற்றும் 01124368800 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும், அதன்பிறகு, மூத்த அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு, விபரங்களை பெற்று,அதனை என்.ஐ.ஏ.,விடம் பகிர்ந்து கொள்வார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement