ஹாசனை கைகழுவிய தேவகவுடா குடும்பம் ம.ஜ.த., தொண்டர்கள் புலம்பல்

கர்நாடகாவின் மாநில கட்சியாக ம.ஜ.த., உள்ளது. இந்த கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, முன்னாள் பிரதமரும் ஆவார். தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.

மாநில கட்சியாக இருந்தபோதிலும் ம.ஜ.த.,வுக்கு கர்நாடகா முழுதும் செல்வாக்கு இல்லை. பழைய மைசூரு பகுதிகள் என்று அழைக்கப்படும் பெங்களூரு ரூரல், ஹாசன், மாண்டியா, துமகூரு, கோலார், சிக்கபல்லாபூர், மைசூரு, ராம்நகர், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் மட்டும் செல்வாக்குடன் ம.ஜ.த., உள்ளது.

இதற்கு காரணம் இந்த மாவட்டங்களில் அதிகம் ஒக்கலிகர் சமூகத்தினர் வசிப்பது தான். தேவகவுடா ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், பிரதமர், முதல்வராக இருந்தபோது தன் சமூகத்திற்காக நிறைய பங்களிப்பு கொடுத்ததாலும், தேவகவுடா மீது இன்றளவும் ஒக்கலிகர் சமூகத்தினர் அதிக மரியாதை வைத்துள்ளனர்.

5 முறை எம்.பி.,



தேவகவுடாவின் சொந்த ஊர் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா தாலுகாவில் உள்ள ஹரதனஹள்ளி கிராமம். ஹாசன் லோக்சபா தொகுதியில் இருந்து தேவகவுடா 5 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசன், ஷ்ரவணபெளகோலா, அரிசிகெரே, பேலுார், ஹொளேநரசிபுரா, அரகலகூடு, சக்லேஷ்பூர் ஆகிய 7 தொகுதிகளும் ஒரு காலத்தில் ம.ஜ.த., கோட்டையாக இருந்தது.

இந்த ஏழு தொகுதிகளிலும் ம.ஜ.த., தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. ஆனால், 2023 சட்டசபை தேர்தலில் ஹாசனில் 4 தொகுதிகளை மட்டும் தான் ம.ஜ.த.,வால் வெல்ல முடிந்தது.

அரிசிகெரேயில் காங்கிரசின் சிவலிங்கேகவுடா வெற்றி பெற்றார். இவர் மூன்று முறை ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். தன் செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெற்று விட்டார். பேலுார், சக்லேஷ்பூர் ஆகிய தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது, ம.ஜ.த.,வை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பாலியல் வழக்கு



இது ஒரு புறம் இருக்க 2019 லோக்சபா தேர்தலில், பேரன் பிரஜ்வல் அரசியல் வாழ்க்கைக்காக தன் ஹாசன் தொகுதியை தேவகவுடா விட்டுக் கொடுத்தார். துமகூரில் போட்டியிட்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஹாசன் எம்.பி.,யாக இருந்தபோது, எந்த மேம்பாட்டுப் பணிகளும் செய்யவில்லை என்று பிரஜ்வல் மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று அலட்சியமாக இருந்துவிட்டார்.

கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் ஹாசனில் ஓட்டுப்பதிவு நடந்ததும், பிரஜ்வல் தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் பதிவாகின. வெளிநாடு சென்று இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தார்.

தேவகவுடா உத்தரவால் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிரஜ்வலை, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது வரை அவர் சிறையில் உள்ளார்.

மனம் உடைந்தனர்



லோக்சபா தேர்தலிலும் பிரஜ்வலை எதிர்த்து போட்டியிட்ட, காங்கிரசின் ஸ்ரேயாஸ் படேல் வெற்றி பெற்று எம்.பி., ஆகிவிட்டார். ஹாசன் லோக்சபா தொகுதி தங்கள் கையைவிட்டு போனதால், தேவகவுடாவும், அவரது மகன்களான எம்.எல்.ஏ., ரேவண்ணா, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி ஆகியோரும் மனமுடைந்தனர். தொண்டர்களும் கண்ணீர் விட்டு புலம்பினர்.

தொண்டர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் பேசிய தேவகவுடா, 'ஹாசனில் மீண்டும் வெற்றி பெறுவோம். கட்சியை பலப்படுத்துவோம்' என்று அறிவித்தார்.

ஆனால் அவரது அறிவிப்பு, அப்படியே நின்றுவிட்டது. வயதாகி விட்டதால், அவரால் ஹாசன் பக்கம் செல்ல முடியவில்லை. ஹாசனில் கட்சியை மீட்டெடுக்க ரேவண்ணாவோ, குமாரசாமியோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ரேவண்ணா மீது பாலியல் வழக்குப் பதிவானதால் அடக்கி வாசிக்கிறார். அவரது மூத்த மகன் சூரஜ் ரேவண்ணாவும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். எம்.எல்.சி.,யாக உள்ள அவராலும் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியவில்லை.

இளம் தலைவர்



மத்திய அமைச்சர் ஆனதால் டில்லியில் இருக்கும் குமாரசாமி, கர்நாடகா வரும்போது எல்லாம் பெங்களூரு, ராம்நகர், மைசூருக்கு தான் செல்கிறார். ஹாசன் பக்கம் செல்வதே இல்லை.

அவரது மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான நிகிலும், தந்தை எவ்வழியோ அவ்வழியே நானும் என்று சொல்வது போல ஹாசன் பக்கமே செல்வது கிடையாது. லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் இருந்தது.

ஹாசனின் ஆறு தொகுதிகளில் கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் தான் இருந்தனர். அரிசிகெரேயில் மட்டும் தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இருந்தார். ஆனாலும், காங்கிரசின் ஸ்ரேயாஸ் படேல் வெற்றி பெற்றார். இளம் தலைவர் என்பதால், ஹாசனில் கட்சியை வலுப்படுத்த ஸ்ரேயாஸ் படேல் உழைத்து வருகிறார்.

இதனால் ம.ஜ.த., தொண்டர்கள் மனதளவில் உடைந்துள்ளனர். நிலைமை இப்படியே சென்றால், ஹாசன் ம.ஜ.த., கோட்டை என்ற பெயர் நாளடைவில் அழிந்துவிடும் என்றும், தொண்டர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.



- நமது நிருபர் -

Advertisement