கர்நாடகாவில் 3 இடங்களில் போர்க்கால ஒத்திகை இன்று! போர் துவங்கினால் தப்புவது குறித்து பயிற்சி

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நாடு முழுதும் 259 மாவட்டங்களில், இன்று போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்து உள்ளது. போரின் போது பொது மக்கள் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்று பயிற்சி அளிப்பதே போர் ஒத்திகையாகும்.

இது தொடர்பாக, பெங்களூரில் உள்ள மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை அலுவலகத்தில், டி.ஜி.பி., பிரசாந்த் குமார் தாகூர் அளித்த பேட்டி:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, கர்நாடகாவில் பெங்களூரு, ராய்ச்சூர், உத்தர கன்னடாவின் கார்வார் ஆகிய இடங்களில் இன்று போர் ஒத்திகை நடத்தப்படும். இந்த ஒத்திகை, ஒரு வாரம் நடக்கும். இந்நேரத்தில் தயார் நிலையில் இருப்பது, பாதுகாப்பில் உள்ள தவறுகள் கண்டறிந்து சரி செய்யப்படும்.

அதிக மக்கள் தொகை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடங்கிய பகுதி, இஸ்ரோ மையம், எலஹங்கா விமானப்படை பயிற்சி மையம், டி.ஆர்.டி.ஓ., உட்பட பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளதால் பெங்களூருவும்; உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில், நாட்டில் மூன்றாவது பெரிய அணு மின் உற்பத்தி நிலையம் உள்ளது என்பதாலும்; மாநிலத்தின் 70 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ராய்ச்சூரில் அனல்மின் உற்பத்தி நிலையம் இருப்பதாலும், இங்கு போர் ஒத்திகை நடக்கிறது.

இதற்கு முன், 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போரின் போது, இத்தகைய ஒத்திகையில் சிவில் பாதுகாப்பு படை ஈடுபட்டிருந்தது. அதன்பின், இத்தகைய ஒத்திகை நடத்தப்படவில்லை.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, சிவில் பாதுகாப்பு படை மீண்டும் இயக்கப்படும். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினோம்.

இந்த ஒத்திகை, இன்று மாலை 4:00 மணிக்கு, மாநிலத்தில் மூன்று இடங்களில் துவங்கும். ஒத்திகை, ஒரு வாரம் நடக்கும். இதற்காக பெங்களூரில் 5,000 பேரும்; எட்டு மாவட்டங்களில் மொத்தம் 1,000 பேரும் ஏற்கனவே பயிற்சி பெற்றுள்ளனர்.

அவசர காலத்தில், பொது மக்களை பாதுகாப்பது, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதே முக்கிய குறிக்கோளாக இருக்கும். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், சிவில் பாதுகாப்பு பிடையினர், சி.ஆர்.பி.எப்., போலீசாரும் இதில் பங்கேற்பர்.

போர் துவங்கினால் மூன்று வகையான சைரன்கள் ஒலிக்கப்படும். முதல் சைரன் ஒலித்தால், தாக்குதல் நடத்தப்பட உள்ளது தொடர்பாக பொது மக்களுக்கு எச்சரிக்கையாகும். இரண்டாவது சைரன் ஒலித்தால், தாக்குதல் நடக்கிறது என்பதாகும். மூன்றாவது சைரன் ஒலித்தால், சகஜ நிலை திரும்பி விட்டது என்பதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement