தி.மு.க.,வின் முதல் ஆலோசனை

திருச்சிக்கு இரண்டு நாள் பயணமாக செல்லும் முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

தேர்தலுக்கு முன், மாநாடு அல்லது பொதுக்கூட்டம் உள்ளிட்ட பணிகளை திருச்சியில் துவங்கினால் திருப்புமுனையாக அமையும் என, தி.மு.க., தலைமை நம்புகிறது. இதற்காக, தேர்தல் காலத்தில் அங்கு மாநாடு நடத்தப்படுவது வழக்கம்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, இரண்டு நாள் பயணமாக, நாளை முதல்வர் ஸ்டாலின் திருச்சி செல்கிறார். அங்குள்ள பஞ்சப்பூரில், 408 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இதை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

பின், சாலை வழியாக சென்று பொதுமக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டு துவங்கவுள்ளது. சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த, அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தேர்தல் பணிகளை திருச்சியில் துவங்க, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அங்கு இரண்டு நாள் முகாமிடும் முதல்வர், கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் தொடர்பான முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார்.

Advertisement