'108' ஆம்புலன்ஸ்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

நெலமங்களா : 'அவசரகால 108 ஆம்புலன்ஸ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு ரூரல், நெலமங்களாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நெலமங்களா அருகில் உள்ள டி.பேகூர் அருகே பொது மருத்துவமனை விரைவில் கட்டப்படும். இதற்காக, கடந்த பட்ஜெட்டிலேயே 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ.,க்களிடம் அவர்கள் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கடிதம் வாங்கப்பட உள்ளது. அதன்பின் அனைத்துத் தொகுதிகளின் பிரச்னைகளும் உடனடியாக தீர்க்கப்படும். '108' ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கலாம்.

அதேநேரம், '108' ஆம்புலன்ஸ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு இருந்தாலோ அல்லது, '108' ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்ட நோயாளிகள் வேண்டுமென தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement