முதல்வரை ஒருமையில் பேசி வீடியோ மைசூரு சிறை வார்டன் 'சஸ்பெண்ட்'

மைசூரு : கடந்த ஏப்ரல் 28ம் தேதி, பெலகாவியில் மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் கண்டன கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசும்போது, பா.ஜ., மகளிர் அணியை சேர்ந்த சில பெண்கள், கருப்பு துணி காண்பித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முதல்வர் கோபம்



இதனால் கோபம் அடைந்த முதல்வர், தார்வாட் கூடுதல் எஸ்.பி., நாராயண் பரணியை அடிக்க கை ஓங்கினார். பொது மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க முதல்வர் சித்தராமையா கை நீட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வரின் இச்செயலை கண்டித்து, அன்றைய தினமே, மைசூரு மத்திய சிறையில் வார்டனாக உள்ள மது குமார், வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் மாலை தான் இந்த வீடியோ தொடர்பான தகவல் வெளியானது.

மொத்தம் 5.33 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் மதுகுமார் பேசியிருந்ததாவது:

போலீசாரின் பதவிக் காலம் 35 ஆண்டுகள்; அரசியல்வாதிகளின் பதவிக் காலம் வெறும் ஐந்து ஆண்டுகள் தான். சட்டம் படித்த முதல்வருக்கு, ஒரு மாவட்டத்தின் ஏ.எஸ்.பி.,யாக இருக்கும் அதிகாரியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

கர்நாடக போலீசார், உங்களின் அடிமைகள் அல்ல. ஏ.எஸ்.பி.,க்கே இந்த நிலை என்றால், ஏட்டுகளின் நிலை என்னவாகும்? அவரின் இந்த செயலால், அவர் மீது நான் வைத்திருந்த மதிப்பு போய்விட்டது.

பாதுகாப்பில்லை



மைசூரு மத்திய சிறை ஊழியர்களின் ஊதியம், மாதந்தோறும் தாமதமாக அவரவர் வங்கிக் கணக்கில் வருகிறது. இவ்வாறு தாமதம் ஆனால், வங்கி கடன்களை எப்படி கட்டுவது?

முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரில், உதயகிரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடந்துள்ளது.

அவரின் சொந்த மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாதபோது, மாநில மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்? எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை. இந்த வீடியோ முதல்வரின் கவனத்துக்கு செல்லும் வரை அனுப்பிக் கொண்டே இருங்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இது தொடர்பாக, மைசூரு மத்திய சிறை கண்காணிப்பாளர் ரமேஷ் கூறுகையில், ''வீடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இங்கு வார்டனாக பணியாற்றி வந்த மது குமார், இந்த வீடியோவை ஏப்., 28ம் தேதியே பதிவேற்றம் செய்துள்ளார். மே 5ம் தேதி மாலை தான் எங்கள் கவனத்துக்கு வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து, துறை ரீதியாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டு உள்ளேன்,'' என்றார்.

முதல்வர் சித்தராமையா குறித்து பேசிய வார்டன் மது குமார் மீது, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண், மைசூரு நகர போலீசில் புகார் அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், 'மங்களூரு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா இறந்தால் தான், ஹிந்துக்கள் சந்தோஷமாக இருப்பர்' என்று பெங்களூரு ஊர்க்காவல் படை வீரர் சுரஜ், தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement