கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்தாத தலைவர்கள்

காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., ஆகிய மூன்று கட்சிகளும், கட்சியை வளர்க்காமல், தங்கள் சுயநலத்துக்காக போராடி வருகின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருந்தாலும், பலர் அமைச்சர் பதவி மீது கண் வைத்திருந்தனர். பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், முணுமுணுப்பும், கோஷ்டி பூசலும் எழுந்தது.

சிறப்பாக செயல்படாத அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று பேச்சுகள் துவங்கின. மறுபுறம், கூடுதலாக துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன.இக்கோரிக்கைகள் அனைத்தையும், தங்கள் 'காட் பாதர்கள்' சார்பில் சில தலைவர்கள் பேசினர்.

தங்கள் தலைவரின் எதிரிகளை தாக்கி பேசுவதன் மூலம், தங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு, கடந்த மாதம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அது, சமூக வலைதளங்களில் கசிந்தன.

தன்னை 'அஹிந்தா' தலைவர் என்று கூறிக் கொள்ளவே சித்தராமையா முயற்சிப்பது தெரிகிறது. கட்சியை வளர்ப்பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை.

முதல்வரை போலவே காட் பாதர்களும் அவர்களுக்கு ஆதரவாக பேசும் தலைவர்களும், கட்சியை வலுப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

பா.ஜ.,



கர்நாடக பா.ஜ.,வும், பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்களை பார்க்க பலரும் விரும்பவில்லை. கட்சியின் அனுமதி இல்லாமல், மனம் போனபடி பேசி வருகின்றனர்.

இது சட்டசபை கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. கூட்டத்தொடரில், பிரச்னைகளுக்கு பா.ஜ., தலைவர்கள் ஒன்றாக குரல் கொடுக்காமல், தனித்தனியாக பேசினர்.

பசனகவுடா பாட்டீல் எத்னால், கட்சிக்கு எதிராக பேசி துவங்கியபோதே, அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக, கட்சிக்கு எவ்வளவு 'டேமேஜ்' ஏற்பட வேண்டுமோ, அனைத்தும் ஏற்பட்டுவிட்டது.

மாநில அரசை எதிர்த்து போராட வேண்டிய பா.ஜ.,வினர், உட்கட்சி பூசலில் மூழ்கி உள்ளனர். கட்சி தலைமையும், மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதை விட, தேசிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது.

ம.ஜ.த.,



ஒரு காலத்தில் மாநிலத்தில் ஆட்சி செய்த கட்சி; யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும், 'கிங் மேக்கராக' இருந்த ம.ஜ.த., மெல்லமெல்ல தேய்பிறையாகி வருகிறது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான ம.ஜ.த.,வில், அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்களால், கட்சி மோசமான நிலையில் உள்ளது.

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தபின், அக்கட்சியில் இருந்த பெரும்பாலான சிறுபான்மை தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தனர்.

ம.ஜ.த.,வோ, கூட்டணியாக மத்திய அரசில் அங்கம் வகிப்பதால், அத்துடன் இருந்து கொள்ளலாம் என நினைக்கிறது. இதனால் இக்கட்சியின் தொண்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

அடுத்த சட்டசபை தேர்தல் வரை இக்கூட்டணி தொடருமா என்று சொல்ல முடியாது. கட்சியின் இமேஜை தக்க வைத்துக் கொள்ள, கட்சி தலைவர்கள் முன்வரவில்லை என்று மூத்த தலைவர்கள் புலம்புகின்றனர்.


- நமது நிருபர் -

Advertisement