ஓங்கி அடித்த இந்தியா! பயங்கரவாத தளங்கள் தரைமட்டம்

பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு நமக்கு தொல்லை தந்து வந்த பாகிஸ்தானை நேற்று ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது இந்தியா. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் நடத்திய அதிகாலை தாக்குதலில், அங்குள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. எல்லைக்கோட்டை தாண்டாமல், ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா நடத்தி முடித்த துல்லிய தாக்குதல், உலக நாடுகளை அசர வைத்துள்ளது.
பதிலடி கொடுக்க வேண்டும்
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியரை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன் சுட்டுக் கொன்றனர். நாடு முழுதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியது இந்த சம்பவம். வழக்கமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அக்கிரமங்களை கண்டுகொள்ளாத காஷ்மீர் முஸ்லிம்கள் கூட இந்த சம்பவத்தால் பொங்கி எழுந்தனர்.
அப்பாவிகளான சுற்றுலா பயணியரை கொன்ற, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், அவர்களை வளர்த்து விடும் பாகிஸ்தான் அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கும் குரல் எழுந்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து, இறக்குமதி நிறுத்தம், துாதரக உறவு துண்டிப்பு என, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், ராணுவ நடவடிக்கை தேவை என்ற குரல் தணியவில்லை. இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை 1:05 முதல் 1:30மணி வரை, 25 நிமிடங்களில் யாரும் எதிர்பாராத தாக்குதலை இந்தியா நடத்தியது. போர் வந்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க, புதன்கிழமையன்று நாடு முழுதும் போர்க்கால ஒத்திகை நடத்தும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை அறிந்து பாகிஸ்தான் அரசும் மெத்தனமாக இருந்தது. அதை பயன்படுத்தி, புதன்கிழமை விடிவதற்குள்
தாக்குதலை அரங்கேற்றியது இந்தியா.
24 ஏவுகணைகள்
என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து பாகிஸ்தான் சுதாரிப்பதற்குள், 25 நிமிடத்தில் இந்த துல்லிய தாக்குதல் நடந்து முடிந்தது. அவசரப்பட்டு பதிலடி கொடுக்காமல், பொறுமையாக, துல்லியமாக திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை, 24 ஏவுகணைகள் செலுத்தி தகர்த்தது இந்தியா.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரமான முசாபராபாத், கோட்லி, பஹவல்புர், ராவலகோடி, சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம், சக்வால் ஆகிய இடங்களில் செயல்பட்டுவந்த பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையங்கள், தலைமை நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.
ஜெய்ஷ் - -இ - -முகமது, லஷ்கர்- - இ- - தொய்பா ஆகிய பிரபலமான பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமானவை இந்த தளங்கள். ஐந்து இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு பாகிஸ்தானிலும் உள்ளன. தாக்குதலில் 80 பேர் வரை மரணம் அடைந்ததாக தெரிகிறது. அவர்களில் மூன்று பேர் மட்டுமே பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்கள். ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகளான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட இவ்வளவு குறைந்த சிவிலியன் பலிகளுடன் தாக்குதல் நடத்தியது இல்லை என்பதால், இந்தியாவின் நடவடிக்கை உலகம் முழுதும் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
விக்ரம் மிஸ்திரி ஒரு காஷ்மீரி பண்டிட்
வழக்கமாக, இதுபோன்ற நாடு கடந்த தாக்குதல் நடந்தால், அதன் விபரங்களை தாக்குதல் நடத்திய நாட்டின் உயர் ராணுவ தளபதிகள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிப்பார்கள். அதற்கு மாறாக, ஜூனியர் அதிகாரிகளை அந்த பொறுப்பை நமது ராணுவம் வழங்கியது. வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, தரைப்படை கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் சர்வதேச ஊடகர்களிடம் சம்பவத்தை விவரித்தனர். விக்ரம் மிஸ்திரி ஒரு காஷ்மீரி பண்டிட். பயங்கரவாதிகளால் மிரட்டி துரத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். சோபியா குஜராத் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அப்பா, தாத்தா ராணுவத்தில் பணியாற்றியவர்கள். சோபியாவின் கணவரும் ராணுவத்தில் இருக்கிறார். வியோமிகா சிங், ஹெலிகாப்டர் விமானியாக சேர்ந்து விங் கமாண்டராக உயர்ந்தவர்.
இந்தியாவின் ஏவுகணைக்கு இலக்கானதை காட்டிலும், இந்த பெண்களின் வழிகாட்டுதலுடன் நடந்த தாக்குதலுக்கு இலக்கானதை பாகிஸ்தான் ராணுவம் பெரிய அவமானமாக கருதுகிறது. ஹிந்துக்களுடன் சேர்ந்து வாழ்வது முஸ்லிம்களுக்கு சாத்தியமே இல்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி சில நாட்களுக்கு முன் சொல்லி இருந்தார். ஆனால் இந்தியா என்பது மதங்களையும் மற்ற வேறுபாடுகளையும் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழும் நாடு என்பதை பாகிச்தானியருக்கும் உலக மக்களுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் சோபியா, வியோமிகா முன்னிலை அளிக்கப்பட்டுள்ளனர்.
ஹிந்து ஆண்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள், “நாங்கள் பெண்களை கொல்வது இல்லை; உங்கள் பிரதமர் மோடியிடம் போய் சொல்லுங்கள்” என்று அவர்களின் மனைவியரிடம் கூறி இருந்தனர். ”அற்ப பதர்களே, நிராயுதபாணியான என் கணவனை கொலை செய்த நீங்கள் பெண் என்பதால் என் மீது கருணை காட்டலாம்; ஆனால், இந்திய பெண்கள் கொடியவர்களுக்கு முடிவு கட்டும் வீரம் கொண்டவர்கள்” என்று காட்டும் வகையில் பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததாகவும் கருதலாம். அந்த பெண்களின் குங்குமத்தை அழித்த பாவிகளை தண்டித்து குங்குமத்தை மீட்டெடுக்கும் அடையாளமாக ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராணுவம் தேர்வு செய்த இந்த பெயருக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி. சிந்தூர் என்பது செந்தூரம் அல்லது குங்குமம் என்று பொருள் படும்.
சோபியா குரேஷியும், வியோமிகா சிங்கும் பேசும்போது, ”நமது தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல; பயங்கரவாதிகளுக்கு எதிரானது” என கூறினர். பொது மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அந்த நாட்டின் ராணுவ அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. பயங்கரவாதிகளே நம்முடைய இலக்கு. அந்த இலக்கு துல்லியமாக தாக்கப்பட்டது என்றனர்.
ஒரே நேரத்தில், ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர், 10 பேர் அடங்குவர். இதைத் தவிர, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். ''இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
நம் ராணுவத்தின், 'கார்ப்ஸ் ஆப் சிக்னல்ஸ்' என்ற பிரிவில் அதிகாரியாக உள்ள சோபியா குரேஷி, குஜராத்தைச் சேர்ந்தவர். உயிரி வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். இவரது கணவரும் ஒரு ராணுவ அதிகாரி. ஐ.நா.,வின் அமைதி குழுவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய சோபியா குரேஷி, 2006ல் காங்கோவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட குழுவில் இடம் பிடித்தார். 2016ல், 18 நாடுகள் பங்கேற்ற, 'எக்சசைஸ் போர்ஸ் 18' அணிவகுப்பு ஒத்திகையில், நம் ராணுவத்தை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி சோபியா குரேஷி ஆவார். பன்னாட்டு ராணுவ பயிற்சியில் நம் ராணுவத்துக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரியும் இவர் தான்.யார் இந்த வியோமிகா சிங்?என்.சி.சி.,யில் சேர்ந்த வியோமிகா சிங், பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். 'வியோமிகா' என்றாலே 'வானத்தின் மகள்' என பொருள். விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட வியோமிகா சிங், 2019 டிச., 18ல் நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டார்.சேடக், சீட்டா போன்ற விமானங்களை ஜம்மு -- காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மிகவும் சிரமமான நிலப்பரப்பு கொண்ட இடங்களில் இயக்கியுள்ளார். 2020 நவம்பரில், அருணாச்சலில் நடந்த மீட்புப் பணிகளை போல பல முக்கிய மீட்புப் பணிகளில் வியோமிகா சிங் ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டு-
'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு குவிகிறது.
காங்கிரசைச்
சேர்ந்த, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ''பஹல்காம்
தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கும், நம்முடைய
ராணுவத்துக்கும் துணை நிற்போம்,' என தெரிவித்துள்ளார்.
'இண்டி'
கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நேற்று
காலை பிரதமர் மோடி மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு
வாழ்த்து தெரிவித்தார்.
காங்., - - எம்.பி., சசிதரூர், 'பிரதமர்
மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டுகிறேன். நம் ராணுவத்துக்கு உறுதியான
ஆதரவை அளிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி
தலைவர் அசாதுதின் ஒவைசி, நேற்று தன் சமூக வலைதள பக்கத்தில் ஏராளமான
பதிவுகளை போட்டு பாராட்டி தள்ளியதோடு, 'பயங்கரவாத தேசமான பாகிஸ்தானுக்கு
இன்னும் கடினமாக பாடம் புகட்ட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
'ஆபரேஷன்
சிந்துார்' வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு, சிவசேனா கட்சி பாராட்டு
தெரிவித்தது. ஒட்டு மொத்த தேசமும், பிரதமர் மோடியின் தலைமையால் பெருமிதம்
அடைவதாக பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார். கேரள கவர்னர்
ராஜேந்திர அர்லேகர், ராணுவமும், பிரதமர் மோடியும் சரியான பதிலடியை
கொடுத்ததாக தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை
சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரசின் தெலுங்கானா முதல்வர்
ரேவந்த் ரெட்டி ஆகியோரும் 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்காக
ராணுவத்துக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவித்தனர். உ.பி.,
முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்
கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரும் பாராட்டினர்.
'பிரதமர் மோடி
தலைமையில் ஒவ்வொரு பயங்கரவாதியையும் வேட்டையாடுவோம்' என முன்னாள்
கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்,
இசையமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன்
உள்ளிட்டோரும் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பஹல்காமில்
கொல்லப்பட்ட மஹாராஷ்டிராவின் சந்தோஷ் ஜக்டேலின் மனைவி பிரகதி, ''விஷயம்
கேள்விப்பட்டதுமே என் கண்களில் கண்ணீர் கசிந்தது. நாம் மவுனமாக இருக்க
மாட்டோம் என பாகிஸ்தானுக்கு உணர்த்தியபிரதமர் மோடி, நிச்சயமாக
பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவார்,' என்றார்.
பஹல்காமில் பலியான
அருணாச்சல் பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி டேஜ் ஹெய்ல்யாங்கின்
மனைவி சரோகம்குவா, உ.பி.,யை சேர்ந்த சுபம் திவேதியின் மனைவி அஷன்யா,
கஸ்துப் கன்போத்தின் மனைவி சங்கீதா, கர்நாடகாவின் மஞ்சுநாத் ராவின் தாய்
சுமதி என உயிரிழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், பிரதமர்
மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, அவர் மீது வைத்த நம்பிக்கை வீண்
போகவில்லை என தெரிவித்துள்ளனர்.
- - நமது சிறப்பு நிருபர் -













