ஆவின் பாலகங்களில் மோர் தட்டுப்பாடு வரவேற்பு இருந்தும் கிடைக்காத அவலம்

தேனி: மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் ரூ.5க்கு விற்கப்படும் ஆவின் மோர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சொந்த தயாரிப்பு மோர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக ஏஜென்டுகள் சிலர் ஆவின் மோர் விற்பனையை தவிர்க்கின்றனர்.

கோடை காலம் துவங்கி உள்ளதால் பொது மக்கள் மோர், இளநீர், கூழ் வகைகளை விரும்பி பருகுகின்றனர். இவற்றில் விலை குறைவாக ஆவின் சார்பில் ரூ.5க்கு மோர் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 140 மி.லி., அளவில் இஞ்சி உள்ளிட்டவை சேர்த்து, இந்த மோர் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான ஆவின் பாலகங்களில் இந்த மோர் விற்பனை செய்வதில் ஏஜென்டுகள் ஆர்வம் காட்டுவது இல்லை. சொந்த தயாரிப்பு என கூடுதல் விலைக்கு மோர் விற்பனை செய்கின்றனர். பொது மக்கள் விரும்பினாலும் ஆவின் மோர் கிடைப்பது இல்லை. இந்த தட்டுப்பாட்டினை போக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: போதிய அளவில் ஆவின் பாலகங்களுக்கு மோர், பால் உள்ளிட்டவை விற்பனைக்கு வழங்கப்படுகிறது. பொது மக்களுக்கு மோர் விற்பனை செய்யாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்., என்றனர்.

Advertisement