ஹனுமன் வழியில் தாக்குதல் -ராஜ்நாத் சிங் பெருமிதம்

2

புதுடில்லி: ராமாயண ஹனுமன் கொள்கையின்படி, துல்லியம், முன்னெச்சரிக்கை, இரக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு துல்லிய தாக்குதல் நடத்தியதாக நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

'ஆப்பரேஷன் சிந்துார்' துல்லிய தாக்குதல் குறித்து பேசிய, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து, மிகச் சரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். டில்லியில் நேற்று நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

ராமாயண இதிகாசத்தில் அசோக வனத்தை அழித்தபோது, ஹனுமன் பின்பற்றிய அதே சித்தாந்தத்தை பின்பற்றி தாக்குதல் நடத்தினோம். அதாவது, துல்லியம், முன்னெச்சரிக்கை, இரக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நம் நாட்டில் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே குறி வைத்து நாங்கள் கொன்றோம். தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை, மிகுந்த சிந்தனையுடனும் உறுதியுடனும் இந்தியா எடுத்தது.

எந்தவொரு பொதுமக்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற எங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறோம். 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக பயங்கரவாத முகாம்களை அழித்த நம் படையினரின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்.

நம் படைகளுக்கு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி; அவரது வழிகாட்டுதலில், நம் படையினர் இந்தியாவை பெருமைப்படுத்தியதோடு, புதிய வரலாறை படைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement