பைனலில் இந்திய பெண்கள் * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது

கொழும்பு: முத்தரப்பு தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், 23 ரன்னில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
இலங்கையில், பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதுகின்றன. நேற்று இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
ஜெமிமா சதம்
இந்திய அணிக்கு பிரதிகா (1), ஹர்லீன் (4), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (28) ஏமாற்றினர். மந்தனா (51) அரைசதம் அடித்து உதவினார். ஒருநாள் அரங்கில் ஜெமிமா, இரண்டாவது சதம் விளாசினார். 101 பந்தில் 123 ரன் எடுத்து அவுட்டானார்.
தீப்தி 93 ரன்னில் அவுட்டாக, சத வாய்ப்பு நழுவியது. ரிச்சா 20 ரன் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 339 ரன் குவித்தது.
அன்னெரி போராட்டம்
கடின இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்கா அணியை லாரா (4), தஸ்மின் (26), மியான் (39) கைவிட்டனர். பின் வந்த ஷாங்கசே (36), சினாலோ (21), அன்னெரி டெர்க்சன் (81) வேகமாக ரன் சேர்த்தனர். கடைசி நேரத்தில் கேப்டன் டிரையான் (43 பந்து, 67 ரன்) அவுட்டாக, இந்தியா பக்கம் வெற்றி திரும்பியது.
தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 314/7 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
முடிவில் 4 போட்டியில் 3 வெற்றியுடன் 6 புள்ளி பெற்ற இந்திய அணி பைனலுக்கு (மே 11) முன்னேறியது. இதில் இலங்கையை சந்திக்க உள்ளது. தொடர்ந்து 3 போட்டியில் தோற்ற தென் ஆப்ரிக்கா, கோப்பை வாய்ப்பை இழந்தது.

Advertisement