உஷார் நிலையில் எல்லைப்பகுதி; சந்தேப்படும் நபரை கண்டதும் சுட உத்தரவு

3


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லை பாதுகாப்பு படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்து இருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குறி வைத்து துல்லியமாக குண்டு வீசி தகர்த்தது. இந்த ஆப்ரேஷனுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.


காஷ்மீர் மட்டும் இன்றி, எல்லையை ஒட்டி இருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் இந்திய ராணுவம் உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளது.
ராஜஸ்தானை பொறுத்தவரை பாகிஸ்தானுடன் 1037 கிலோ மீட்டர் எல்லையை பகிர்கிறது. இந்த எல்லைப்பகுதி முழுதும் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.


சந்தேகத்துக்கு இடமானோர் நடமாட்டம் தெரிந்தால் கண்டதும் சுட, எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையும் எல்லை பகுதியில் உஷார் நிலையில் உள்ளது. ஜோத்பூர், கிஷான்கர்க், பிகானர் ஏர்போர்ட்கள் மே 9ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எல்லையில் ஏவுகணை தடுப்பு சிஸ்டம், ட்ரோன் தடுப்பு சிஸ்டம் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளன. ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதே போல் பஞ்சாப் எல்லையிலும் ராணுவம் உஷார் நிலையில் இருக்கிறது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. போலீசாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement