ஜெய்ப்பூர் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெய்ப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை குறிப்பிட்டு, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து வருகிறது. போட்டிகள் நடக்கும் மைதானங்களில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் மைதானமும் ஒன்று. ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானமாக இது விளங்குகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில விளையாட்டு கவுன்சிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 9.13க்கு வந்த மிரட்டல் இ-மெயிலில், . ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மைதானத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உங்களால் முடிந்தால் ஒவ்வொருவரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரும் மே 16ம் தேதி பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, மே 11ம் தேதி தரம்சாலாவில் நடக்கவிருந்து மும்பை - பஞ்சாப் இடையிலான ஆட்டம், அகமதாபாத்திற்கு மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement