வாகனம் மோதி சேதமான கேமரா சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், எண்டத்துார் சாலை, காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் காணவும், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில் வந்தவாசி சாலையில் உள்ள கல்வெட்டு கோவில் அருகே, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பத்தின் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.

இதனால், அவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் மீது கண்காணிப்பு கேமரா எந்நேரமும் விழும் சூழல் உள்ளது. எனவே, சாய்ந்து கிடக்கும் கண்காணிப்பு கேமரா கம்பத்தை சரிசெய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement