சூறாவளி காற்றில் 3.20 லட்சம் வாழை மரங்கள் சேதம்; தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
மேட்டுப்பாளையம்; சூறாவளி காற்றால் மேட்டுப்பாளையம் தாலுகாவில், 3.20 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.
இது குறித்து காரமடை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுசிந்திரா விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில், தோட்டக்கலை பயிர்கள் சுமார் 8,000 ஹெக்டர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இதில் வாழை பிரதான பயிராகும். கடந்த,1ம் தேதி சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை, மருதூர், வெள்ளியங்காடு, சிக்கதாசம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில், ஏராளமான வாழை மரங்கள் சேதம் அடைந்தன.
மாவட்ட கலெக்டர் பவன்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆகியோர் அறிவுரைப்படி, தோட்டக்கலை துறை அலுவலர்கள் சேதமடைந்த வாழைகளை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதில், 125 ஹெக்டேர் பரப்பளவில் 3.20 லட்சம் வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது கணக்கெடுக்கப்பட்டது. மேலும் விடுபட்ட பகுதிகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் நடைபெறும். முழுவதுமாக வாழையின் சேதங்கள் கணக்கெடுத்து, அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். மேலும் சூறாவளி காற்றில் இருந்து வாழை மரங்களை பாதுகாக்க, தோட்டக்கலை துறை தொழில் நுட்பத்தை அறிவித்துள்ளது.
வாழை மரங்கள் சாயாமல் இருக்க, இரண்டு குச்சிகளை எக்ஸ் வடிவில் முட்டுக் கொடுக்க வேண்டும். இது காற்றின் வேகத்தை தடுத்து, உயிர் வேலியாக பயிர்களை பாதுகாக்கும்.
வாழை மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைக்க வேண்டும். முதிர்ந்த வாழை தார்களை உடனுக்குடன் அறுவடை செய்ய வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.