இந்திய எல்லையில் போர் பதட்டம்: பிரிமியர் போட்டி பாதியில் ரத்து

தர்மசாலா: பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய பிரிமியர் லீக் போட்டி போர் பதட்டம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின. மழையால், ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது. ஓவர் குறைக்கப்படவில்லை. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் நல்ல துவக்கம் கொடுத்தனர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி விளாசினார் ஆர்யா. இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரப்சிம்ரன், ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார்.
தொடர்ந்து அசத்திய ஆர்யா, துஷ்மந்தா சமீரா பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். பஞ்சாப் அணி 4 ஓவரில், 50 ரன்னை எட்டியது. இந்த சீசனில் தனது முதல் ஓவரை வீசிய தமிழகத்தின் நடராஜன், 4 ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 69/0 ரன் எடுத்திருந்தது.
ஆர்யா அசத்தல்: கேப்டன் அக்சர் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆர்யா, 25 பந்தில் அரைசதம் எட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரப்சிம்ரன், மாதவ் திவாரி வீசிய 9வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய ஆர்யா, குல்தீப் யாதவ் வீசிய 10வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். பொறுப்பாக ஆடிய பிரப்சிம்ரன், 28 பந்தில் அரைசதம் எட்டினார். இவர்களை பிரிக்க முடியாமல் டில்லி அணி பவுலர்கள் திணறினர்.
பாதியில் நிறுத்தம்: முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த போது நடராஜன் 'வேகத்தில்' ஆர்யா (70 ரன், 6 சிக்சர், 5 பவுண்டரி) வெளியேறினார். பஞ்சாப் அணி 10.1 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்திருந்த போது மைதானத்தில் இருந்த மின்கோபுர விளக்கு பழுதடைந்தது.
இதனால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மற்ற மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டன. பிரப்சிம்ரன் (50) அவுட்டாகாமல் இருந்தார்.
காரணம் என்ன: இந்நிலையில் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் தெரியவந்துள்ளது. இந்திய எல்லைப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள், இரு அணி வீரர்கள் மைதானத்தை விட்டு பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மீதமுள்ள போட்டிகளை நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ., ஆலோசனை நடத்தி வருகிறது.
மைதானம் மாற்றம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததால், இந்திய எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து வரும் மே 11ல் தர்மசாலாவில் நடக்கவுள்ள பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை
தர்மசாலாவில் இதுவரை நடந்த 15 பிரிமியர் லீக் போட்டியில், 'டாஸ்' வென்ற அணி முதலில் 'பேட்' செய்தது நேற்று 2வது முறையாக அரங்கேறியது. இதற்கு முன், 2011ல் இங்கு நடந்த பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி முதலில் 'பேட்' செய்தது.
பிரப்சிம்ரன் '100'
பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங், நேற்று தனது 100வது 'டி-20' போட்டியில் விளையாடினார். இதுவரை 100 'டி-20' போட்டியில், 2 சதம், 20 அரைசதம் உட்பட 2860 ரன் எடுத்துள்ளார்.
நான்காவது அரைசதம்
அபாரமாக ஆடிய பிரப்சிம்ரன் சிங், நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 4வது அரைசதத்தை (83, 54, 91, 50*) பதிவு செய்தார். பிரிமியர் லீக் அரங்கில் அதிக முறை (4), தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் ரன் விளாசிய பஞ்சாப் துவக்க வீரரானார் பிரப்சிம்ரன். இதற்கு முன் கெய்ல் (2018), ராகுல் (2018, 2019, 2020) தலா 3 முறை இப்படி ரன் மழை பொழிந்தனர்.
மேலும்
-
ராணுவத்தில் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம்: தாராளமான அணுகுமுறை தேவை: சுப்ரீம் கோர்ட்
-
போரில் ஆர்வமில்லை!
-
தந்தி மாரியம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்
-
தாவரவியல் பூங்கா அருகே நாயை கவ்வி சென்ற சிறுத்தை; 'கிளன்ராக்' பகுதி குடியிருப்பு வாசிகள் 'பீதி'
-
93.97 சதவீதம் பேர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி; 20 பள்ளிகள் 'சென்டம்'
-
பாக்., தாக்குதல் எதிரொலி; தலைநகர் டில்லிக்கு உச்சபட்ச பாதுகாப்பு