ராமநாதபுரத்தில் பெயரளவில் வரும் குடிநீர் மக்கள் அவதி 

ராமநாதபுரம்: கோடை என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் ராமநாதபுரம் நகராட்சி, சுற்றியுள்ள கிராமங்களில் 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை பெயரளவில் குடிநீர் வழங்கப்படுவதால் மக்கள் தனியார் லாரிகளில் குடம் ரூ.13க்கு விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 65 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 2011ம் ஆண்டில் திருச்சி நங்கநல்லுார் பகுதி காவிரியில் இருந்து குழாய் மூலம் ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரப் படுகிறது.

காவிரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் கீழ்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி மேல்நிலைத் தொட்டி, லேத்தம்ஸ் மேல்நிலைத் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் மேல்நிலைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு நகராட்சி பகுதிகளில் தினமும் 33 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய காவிரி குடிநீர் வழங்கும் திட்டத்தில் நகர், புறநகர் பகுதிகளில் குழிதோண்டி குழாய் பதிக்கும் பணியால் காவிரி குழாய் சேதமடைந்து வீணாவது வாடிக்கையாகியுள்ளது. 33 லட்சம் லிட்டருக்கு 20 லட்சம் தான் வருகிறது.

தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் குடிநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் 2 முதல் 3 நாட்களுக்கு பெயரளவில் காவிரி குடிநீர் வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் லாரிகளில் குடிநீரை குடம் ரூ.13 வரை விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் குடிநீர் வடிகால்வாரியம், நகராட்சி, ஊராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், குழாய் சேதமடைந்துள்ளதை செப்பனிடும் பணி நேற்று முடிந்து விட்டது. நாளை (இன்று) குடிநீர் வந்து விடும், தொய்வின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

---------------

Advertisement