ஆலங்கட்டி மழையால் கொடியில் இருந்து உதிர்ந்த திராட்சை காய்கள்

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் மாலை திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மலை அடிவாரங்களில் உள்ள திராட்சை தோட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் அதிக வெப்பமும், மாலை நேரங்களில் திடீர் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை கம்பம் பள்ளத்தாக்கில் கிழக்கு திசையில் சூறைக்காற்றும், ஆலங்கட்டி மழையும் பெய்தது.

இதில் காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, பூசாரி கவுண்டன்பட்டி, சுருளி அருவி, அணைப்பட்டி உள்ளிட்ட மேகமலை அடிவார கிராமங்களில் உள்ள திராட்சை தோட்டங்கள் பாதிக்கப்பட்டன.

ஆலங்கட்டி மழை விழுந்து கொடிகள், பழங்கள் சேதமடைந்தது. சுமார் 45 நிமிடங்கள் பெய்த மழை காரணமாக பழுப்பதற்கு தயாராய் இருந்த திராட்சை காய்கள் டன் கணக்கில் உதிர்ந்து சேதமடைந்தன.

இதுகுறித்து திராட்சை சாகுபடியாளர்கள் கூறுகையில், ''மகாராஷ்டிராவில் இருந்து வரத்து நின்றுள்ள நிலையில், நமது சாகுபடி பழங்களின் விலை உயர துவங்கி உள்ளது. இந்நிலையில் ஆலங்கட்டி மழையால் கொடிகளும், பழங்களும் சேதமடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.'', என்றனர்.

Advertisement