புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

2

கோவை:

முன்னாள் கவர்னர் தமிழிசை அளித்த பேட்டி:




வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி பேசிவிட்டு, இப்போது போர் வேண்டாம் என்கின்றனர். போர் வேண்டுமா என்பது குறித்தெல்லாம் வைகோவிடம் யாரும் கேட்கப் போவதில்லை.

அதை ராணுவமும், ராணுவ அமைச்சகமும் தான் முடிவு செய்ய வேண்டும். காஷ்மீரை பற்றி மாற்றுக்கருத்து சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது; அனைவரும் நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும்.

ராணுவத்தோடு துணை நிற்போம் என முதல்வர் சொல்லியிருப்பது தவறில்லை. அதில், பிரதமரோடு துணை நிற்போம் என சொல்லி இருக்க வேண்டாமா? இங்கு, ஒரு மாணவனின் சின்ன சாதனையைகூட, முதல்வர் சாதனை என சொல்கிறீர்கள்.

தமிழக அமைச்சரவையை ஊழல் அமைச்சரவை என்று சொன்னால் தவறில்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஊழல் வழக்குகள் நடந்து வருகின்றன.

தமிழக அமைச்சர்கள் ஒன்பது பேர் மீது வழக்குகள் உள்ளன. மக்கள் வரிப் பணத்தை சுருட்டியவர்கள், தமிழகத்தில் ஆட்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகியும், வேங்கைவயல் சம்பவத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

புதுக்கோட்டையில் ஜாதி வேற்றுமை கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதி என்பது தமிழகத்தில் துளியும் இல்லை. இதில் நான்காண்டு கால சாதனை என தி.மு.க., அரசு கொண்டாடி வருகிறது. ஆனால், தெருவில் நின்று மக்கள் திண்டாடி வருகின்றனர்.

புதிதாக வருபவர்களுக்கு முதல்வர் கனவு இருக்கக்கூடாது என முதல்வர் சொல்கிறார். ஏன், உங்கள் புதல்வருக்கு மட்டும் தான் அந்தக் கனவு இருக்க வேண்டுமா?

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார் ஸ்டாலின். இக்கூட்டணி சந்தர்ப்பத்துக்கு ஏற்ற கூட்டணி என்பதை அவர் உணர வேண்டும்.

எனக்கு குளிர் ஜுரம் வரும் என அமைச்சர் சேகர்பாபு சொல்கிறார். அதற்காக கவலைப்பட மாட்டேன். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் திறன், இயற்கையிலேயே எனக்கு வாய்த்துள்ளது.

கலப்பட தண்ணீர் குடித்தால் மட்டும் தான் குளிர் ஜூரம் வரும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கலப்பட குடிநீர் தான் உள்ளது. பெருமை பீற்றிக் கொள்ளும் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் இது தான்.

அதனால், அமைச்சர் சேகர்பாபு, சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி, தமிழக மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

Advertisement