நீதிபதி வீட்டில் பணக் குவியல்: உறுதி செய்தது விசாரணை குழு

22

புதுடில்லி : டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணக் குவியல் இருந்ததை, உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மூன்று பேர் விசாரணை குழு உறுதி செய்துள்ளது.


டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில், மூட்டை மூட்டையாக பணக் குவியல் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மூன்று பேர் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.


பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தாவாலியா, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் அடங்கிய இந்தக் குழு, தன் அறிக்கையை, கடந்த, 3ம் தேதி சமர்ப்பித்தது.


பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணை, கிடைத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணக் குவியல் இருந்ததை, இந்தக் குழு உறுதி செய்துள்ளது.


தற்போது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மாவுக்கு எந்தப் பணியும் ஒதுக்கப்படவில்லை. தன் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்கிடையே, நீதிபதி பதவியில் இருந்து யஷ்வந்த் வர்மாவை விலகும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள மற்ற மூத்த நீதிபதிகளிடமும், தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.


தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வரும், 13ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்குள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement