மிகவும் துல்லியமான தாக்குதல்; மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு

5

திருவனந்தபுரம்: ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மேலும், 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


இதனிடையே, இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களையும், ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள காங்கிரஸ் எம்.பி.,யுமான சசி தரூர், மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது; பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மிகவும் துல்லியமாக இருந்தது. முரிட்கேவில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைமையகம் உள்ளிட்ட 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, இரவு நேரத்தில் தாக்குதலை நடத்தியது மிகவும் புத்திசாலித்தனமான செயலாகும்.


இந்த தாக்குதலானது பாகிஸ்தானுடன் மோதலை அதிகரிப்பதற்காக நடந்தது அல்ல. இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதலை நடத்தினால், என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதை காட்டுவதற்காகத் தான். மேலும் தாக்குதலை நடத்த இந்தியாவுக்கு எந்த திட்டமும் இல்லை. பதற்றத்தை தணிக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம் தான் உள்ளது.


இந்தியாவுடன் போர் தொடக்க விரும்பினால், பாகிஸ்தான் 4 நாட்கள் கூட தாங்காது. நீண்ட போரை நடத்த பாகிஸ்தானால் முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement