இந்தியா தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தான்: வெளியுறவு செயலர் உறுதி

புதுடில்லி: '' இந்தியா தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள். அவர்களின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படுகிறது,'' என இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. மேலும், இந்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளது.
டில்லியில் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ அதிகாரி சோபியா குரேஷி உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்தனர்.
தோல்வி
அப்போது விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் தான் இந்த பிரச்னைகளுக்கு துவக்கப்புள்ளி. பதற்றத்தை பாகிஸ்தான் தான் உருவாக்கியது. இந்தியா எப்போதும் பதற்றத்தை உருவாக்கியது இல்லை. அதற்கு ஆதரவாக இருந்தது கிடையாது.
நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா அளித்த பதிலடியில், லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்தியாவின் 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
பிரச்னையை பெரிதாக்க பாக்., முயற்சி செய்கிறது. நாம் பதிலடி மட்டுமே தருகிறோம். இந்தியா தொடர்பாக பாகிஸ்தானில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதிகளுக்கு புகலிடம்
ஐ.நா., சபையில் லஷ்கர் அமைப்பை பாகிஸ்தான் ஆதரித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு டிஆர்எப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பின்வாங்கியது. ஐ.நா., அறிக்கையில் அந்த அமைப்பின் பெயரை குறிப்பிட வேண்டாம் என பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்தது.
மசூத் அசார் உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது. ஒசாமா பின்லாடனுக்கு புகலிடம் வழங்கிய பாகிஸ்தான், அவரை தியாகி எனக்கூறியது.
பயங்கரவாதிகளுடனான தொடர்பை பாகிஸ்தான் அமைச்சர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சர்வதேச அளவில் பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடு என்ற பெயர் பாகிஸ்தானுக்கு உள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகவும் உள்ளது.
மும்பை தாக்குதல்
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, குற்றவாளிகள், அவற்றை பாகிஸ்தானில் இருந்து இயக்கியவர்கள் பற்றிய அனைத்து விதமான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தோம். ஆனால், அந்த நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இடையூறு தான் செய்தது. இனி மேல் பாகிஸ்தான் கூறுவதை எந்த விதத்திலும் நம்ப முடியாது.
பயங்கரவாதிகளுக்கு மரியாதை
போர் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் தான். அவர்களின் இறுதிச்சடங்கில் ராணுவ அதிகாரிகள் பங்கு கொள்கின்றனர். அரசு மரியாதை அளிக்கப்படுகிறது.தேசிய கொடியை போர்த்தியதை கூட பார்க்க முடிந்தது.
கண்டிப்பு
பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே இந்தியாவின் நோக்கம். மக்களை அல்ல. பாகிஸ்தானில் எந்தவொரு மத வழிபாட்டு தலங்களையும் இந்தியா தாக்கவில்லை. பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இந்தியாவின் தாக்குதலை மதரீதியிலானதாக மாற்ற பாகிஸ்தான் முயற்சிக்கிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் கண்டித்துள்ளனர்.
பதிலடி
பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. மேற்கொண்டு பாகிஸ்தான் தாக்கினால் உரிய பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மட்டுமே இந்தியா குறிவைத்துள்ளது. பின்விளைவுகளுக்கு பாகிஸ்தானே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். பதற்றத்தை உருவாக்கியது பாகிஸ்தான். அதற்கு இந்தியா பதிலடி மட்டுமே அளித்து வருகிறது.
சிந்து நதி ஒப்பந்தம்
போர்கள் நடந்தபோதும், 60 ஆண்டுக்கும் மேலாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மதித்து செயல்படுத்தியது. ஆனால் பாகிஸ்தான் வேண்டும் என்றே பல இடையூறுகளை இந்தியாவுக்கு செய்தது. மேற்கு நோக்கி பாயும் நதிகளில் இந்தியாவுக்கு ஒப்பந்தப்படி இருக்கும் உரிமையை பயன்படுத்தி விட முடியாத வகையில் இடையூறுகளை செய்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம், நட்பு அடிப்படையில் தான் ஏற்படுத்தப்பட்டது. இது அந்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் கூட இருக்கிறது. அதை அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும். சூழ்நிலைகள் மாறிய நிலையில் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய அழைத்தபோது, அவர்கள் வரவில்லை. அந்த நிலையில் தான் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இந்தியா முடிவு செய்தது.இவ்வாறு அவர் கூறினார்.







மேலும்
-
பள்ளி வாகனங்களில் குறைகள் இருந்தால் தகுதிச்சான்று ரத்து கலெக்டர் எச்சரிக்கை
-
வேகவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கோரிக்கை
-
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி 94.96 சதவீதம்
-
கழிப்பறை செல்ல முடியாமல் தவித்தவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க உத்தரவு
-
மரக்கன்றுகள் வாங்க வனத்துறை புதிய வசதி
-
அடாவடி ஆட்டோ ஓட்டுனர் கைது