ஆபத்து காலத்தில் எப்படி செயல்படணும்; சென்னையில் 3 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!

2

சென்னை: மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில், 2வது நாளாக இன்று (மே 08) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஆபத்து காலத்தில் எப்படி செயல்பட வேண்டுமென விளக்கம் அளிக்கப்பட்டது.


காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே நாடு முழுதும் அனைத்து மாநிலங்களிலும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.


அதன்படி நேற்று நாடு முழுவதும் சுமார் 259 இடங்களில் போர் ஒத்திகை நடந்தது.
போர் காலத்தில் மக்களை எப்படி பாதுகாப்பது, போரில் காயமடையும் வீரர்களை எப்படி மீட்பது, அவசர நிலையில் என்னென்ன வழிமுறைகளை செய்ய வேண்டும், கட்டிடங்களில் சிக்கி இருக்கும் மக்களை எப்படி மீட்பது உட்பட பல்வேறு விஷயங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டது.


சென்னையில் நேற்று துறைமுகம், கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இந்த போர் ஒத்திகை நடந்த நிலையில், 2வது நாளாக இன்று சென்னை விமான நிலையத்தில் நடந்தது. விமான நிலையம், மணலி சிபிசிஎல், எண்ணூர் துறைமுகத்தில் ஒத்திகை நடைபெற்றது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், 50க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள், தமிழக போலீசார் திரண்டனர்.

விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலின் போது பயணிகளை எப்படி மீட்பது, அபாய ஒலி எழுப்புவது,பயணிகள் தங்களை தாங்களாகவே எப்படி பாதுகாத்துக் கொள்வது, தாக்குதல் சமயத்தில் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தத்ரூபமாக செய்து காட்டினர்.


இது ஒத்திகை என தெரியாமல் பயணிகள் பீதி அடைந்ததால், சென்னை விமான நிலையத்தில் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது. இது சாதாரணமான போர்க்கால ஒத்திகை தான் என அதிகாரிகள் எடுத்துக் கூறிய பின் பயணிகள் சகஜ நிலைக்கு திரும்பினர்.

Advertisement