இன்ஜினியர் குத்தி கொலை போன் திருடன் ஆவேசம்

மாகடி ரோடு: திருடிய மொபைல் போனை திரும்ப கொடுக்கும் போது ஏற்பட்ட தகராறில், இன்ஜினியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கூரியர் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக், 52. பெங்களூரு ராஜாஜிநகர் தொழிற்பேட்டையில் உள்ள, தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்தார்.

இவரது மொபைல் போன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அலுவலகத்தில் இருந்து காணாமல் போனது.

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, நிறுவனத்திற்கு கூரியர் கடிதம் வழங்க வந்த ஊழியர் மனோஜ், 28 என்பவர், மொபைல் போனை திருடி சென்றது தெரிந்தது.

இதையடுத்து, மனோஜிடம் பேசிய அப்துல் மாலிக், 'என் மொபைல் போனை திரும்ப தர வேண்டும்; இல்லாவிட்டால் போலீசில் புகார் செய்து விடுவேன்' என்று கூறி உள்ளார். பயந்து போன மனோஜ், மொபைல் போனை திரும்ப தர ஒப்பு கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு மனோஜிடம் இருந்து, மொபைல் போனை வாங்குவதற்காக தொழிற்பேட்டை பகுதியில் அப்துல் மாலிக்கும், அவரது நண்பர் ஜைனுாலும் நின்றனர்.

அங்கு வந்த மனோஜுக்கும், அப்துல் மாலிக்கிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மனோஜ், இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

அப்துல் மாலிக் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜைனுால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

ஜைனுால் அளித்த புகாரில் மனோஜை, மாகடி ரோடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement