5 ஐ.ஐ.டி.,க்கள் விரிவாக்கம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தார்வாட் உட்பட நாட்டில் உள்ள ஐந்து ஐ.ஐ.டி.,க்களை விரிவுபடுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார்.

புதுடில்லியில் மத்திய உணவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்த பேட்டி:

கர்நாடகாவின் தார்வாட், ஆந்திராவின் திருப்பதி, சத்தீஸ்கரின் பிலாய், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு, கேரளாவின் பாலக்காடு ஆகிய ஐந்து ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்காக, 11,828.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு திறன் விரிவுபடுத்தப்படும். புதிதாக 6,500 மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பு உருவாக உள்ளது. தொழில் கல்வி தொடர்புகளை வலுப்படுத்த ஐந்து புதிய, அதிநவீன ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்கப்படும்.

இப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கி, 2029 வரை நடக்கும். 130 பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர். கடந்த பத்து ஆண்டுகளில், 23 ஐ.ஐ.டி.,களில் மாணவர்கள் சேர்க்கை 65 ஆயிரத்திலிருந்து 1.35 லட்சமாக அதிகரித்து உள்ளது. அதாவது, 100 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஐ.ஐ.டி.,க்கள் விரிவாக்கத்தின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் போன்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement