ஹாவேரி, பாகல்கோட் விபத்துகளில் 9 பேர் பலி

ஹாவேரி: ஹாவேரி, பாகல்கோட்டில் நடந்த விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
ஹாவேரி மாவட்டம், பேடகி தாலுகா மோட்டபென்னுார் கிராமம் வழியாக செல்லும், சென்னை - டில்லி தேசிய நெடுஞ்சாலை 48ல் நேற்று மதியம் 12:30 மணியளவில் ஒரு 'ஆடி' கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது.
திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது.
சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்பக்கம் மோதி சொருகியது. அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், பேடகி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உறவினர் வீடு
சம்பவ இடத்திற்கு எஸ்.பி., அன்சுகுமார், பேடகி போலீசார் வந்தனர். வாகன ஓட்டிகள் உதவியுடன் காருக்குள் இருந்தவர்களை மீட்கும் முயற்சி நடந்தது.
ஆனால், இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தது தெரிந்தது. இருவர் உயிருக்கு போராடினர். அவர்களை மீட்டு ஹாவேரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் ராணிபென்னுாரில் பேக்கரி நடத்தி வரும் அப்ரோஸ் என்பவர் உறவினர்களான பரான், 27, உம்மிஷிபா, 16, அலிஷா, 20, புலகான், 17, பெரோஸ், 42, என்பது தெரிந்தது.
இன்னொருவர் பெயர் தெரியவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் பெயர்கள் தாஷ்கின், மெஹக் என்பதும் தெரியவந்தது.
அப்ரோஸ் வீட்டில் கடந்த 6ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹரிஹரா, கோவாவில் இருந்து உறவினர்கள் வந்து இருந்தனர்.
நேற்று மதியம் இரண்டு கார்களில் 16 பேர், ஷிகாவி குன்னுாரில் உள்ள அகாடி தோட்டா என்ற சுற்றுலா தலத்திற்கு புறப்பட்டு சென்றனர். ஒரு கார் முன்பாக சென்று விட்டது.
இரண்டாவது சென்ற கார் தான் விபத்தில் சிக்கி, அதில் இருந்த ஆறு பேர் இறந்தது தெரியவந்து உள்ளது.
விபத்து நடந்த இடம் சென்னை - டில்லி தேசிய நெடுஞ்சாலை என்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை போலீசார் சரி செய்தனர்.
3 சிறுவர்கள்
இதுபோல பாகல்கோட் தாலுகா சீமிகேரி பைபாஸ் சாலையில் நேற்று மதியம் ஒரே பைக்கில் சித்து ராஜு கனி, 16, சந்தோஷ் கூடகி, 16, கம்மண்ணா, 16, ஆகிய 3 பேர் சென்றனர்.
சாலையில் முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை, இடதுபக்கமாக 'ஓவர் டேக்' செய்ய முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரியை டிரைவர் திருப்பினார். பைக் மீது லாரி உரசியது. பைக்கில் இருந்து தவறி மூன்று பேரும் சாலையில் விழுந்தனர்.
அவர்கள் மீது லாரி சக்கரம் ஏறி, இறங்கியது. உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து நடந்ததும் லாரியை விட்டுவிட்டு டிரைவர் தப்பி சென்றார்.
இந்த விபத்துகள் குறித்து பேடகி, கலடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரண்டு விபத்துகளில் ஒரு நாளில் ஒன்பது பேர் இறந்த சம்பவம் ஹாவேரி, பாகல்கோட் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.